Devara BoxOffice: ஏமிரா இதி? பாக்ஸ் ஆபிஸில் சறுக்கிய தேவரா... இரண்டாவது நாள் வசூல் இப்படி ஆயிடுச்சே!
ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் தேவரா வசூல் பெரும் சரிவை சந்தித்துள்ளது.

சென்னை: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்துள்ள தேவரா திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், தற்போது முதல் பாகத்தை படக்குழு வெளியிட்டுள்ளத். ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என இரண்டு பாத்திரங்களில் நடித்துள்ளார். ஜான்வி கபூர், சயிப் அலிகான், கலையரசன், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். 27ம் தேதி வெளியான தேவரா, முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூலித்தது.
இதனால் அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது நாளிலேயே மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளதாக தெரிகிறது. தேவரா படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் இரண்டாவது நாளான நேற்று 71 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. மொத்தமாக இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 243 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால், குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் நாளை விட ரொம்பவே குறைவாக வசூலித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது ஜூனியர் என்டிஆரின் தேவரா. இதன் காரணமாக வரும் நாட்களில் இப்படத்தின் கலெக்ஷன் இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தேவரா மேக்கிங் நன்றாக இருந்தாலும், படத்தின் கதையிலேயே நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்யும் கிராமத்தினர், ஒரு மலையின் மீது வசித்து வருவதெல்லாம் எப்படி நம்ப முடிகிறது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மீன் பிடித்தொழில் செய்யும் 4 கிராமத்தினர் ஜூனியர் என்டிஆரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றனர். கடல் வழியாக செல்லும் கப்பல்களில் உள்ள கண்டெய்னர்களை, டான் ஒருவனுக்காக கடத்துவது தான் இந்த கிராமத்தினரின் வேலை. ஆனால், அதில் தீவிரவாதிகளுக்காக ஆயுதங்கள் கடத்தப்படுகிறது எனத் தெரிந்ததும், ஜூனியர் என்டிஆர் அதற்கு எதிராக நிற்கிறார். இதனால் 3 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து ஜூனியர் என்டிஆரை போட்டுத் தள்ளுகின்றனர். அதன்பின்னர் மகன் ஜூனியர் என்டிஆர் என்ட்ரியாக, மீதி திரைக்கதை என்னவாகிறது என்பது தான் தேவரா திரைப்படம்.
மேக்கிங், புரொடக்ஷன் வேல்யூ நன்றாக இருந்தாலும், கதையும் திரைக்கதையும் ரசிகர்களுக்கு பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் தான் முதல்நாளை விட இரண்டாவது நாள் வசூலில் தேவரா தடுமாறி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?






