இதோ வந்திட்டாரு இந்தியன் 2 தாத்தா . ஷங்கர் ஜெயித்தாரா? ஏமாற்றினாரா?

Indian 2 Movie Review in Tamil : 28 ஆண்டுகளுக்குபின் இந்தியன் 2 வந்துள்ளது. இந்தியன் தாத்தா கவர்ந்தாரா? ஷங்கரின் முயற்சிக்கு வெற்றியா? தோல்வியா?

Jul 12, 2024 - 17:28
Jul 12, 2024 - 17:35
 0
இதோ வந்திட்டாரு இந்தியன் 2 தாத்தா . ஷங்கர் ஜெயித்தாரா? ஏமாற்றினாரா?
Indian 2 Movie Review in Tamil


Indian 2 Movie Review in Tamil : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியாபவானிசங்கர், சமுத்திரக்கனி, தம்பிராமையா, ரகுல்ப்ரித்சிங் உட்பட பலர் நடித்த இந்தியன் 2 ஒருவழியாக வெளியாகி விட்டது. இந்தியன் தாத்தாவை  comeback  என்று ரசிகர்கள் சொல்கிறார்களா?. goback என்று துரத்துகிறார்களா?  இதோ விரிவான விமர்சனம்...


பார்க்கிங்டாக் என்ற யூடியூப் சேனல் நடத்தும் சித்தார்த், பிரியாபவானிசங்கர், நண்டு ஜெகன், ரிஷி  ஆகியோர்  கல்வித்துறையில், அரசு அலுவலகங்களில், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அநியாயங்கள் குறித்து  கிண்டலாக வீடியோவெளியிடுகிறார்கள். ஆனால் பலன் இல்லை. போலீஸ் உட்பட யாரும் அவர்கள் குரலை கேட்பதில்லை.  இந்த சமயத்தில் இந்தியன் தாத்தா மீண்டும் வந்தால் நல்லா இருக்கும் என்று பீல் பண்ணுகிறார்கள். சமூக வலைதளங்களில் comebackindian என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்கிறார்கள். அதை பார்த்துவிட்டு,   தைவானில் தற்காப்பு பயிற்சி பள்ளி நடத்தி வரும் இந்தியன் தாத்தாவான கமல், தனது ‘வர்ம’ பாணியில், ஒரு தொழிலதிபரை  கொலை செய்துவி்ட்டு இந்தியா திரும்புகிறார். அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய துடிக்கிறார் சிபிஐ அதிகாரியான பாபிசிம்ஹா. ஆனால், சமார்த்தியமாக தப்பும் சேனாதிபதி என்ற இந்தியன் தாத்தா, முதற்பாகம் போல் வர்மக்கலையை பயன்படுத்தி சிலரை கொலை செய்கிறார். பாபிசிம்ஹா டீம் அவரை பிடித்ததா? ஆரம்பத்தில் இந்தியன் தாத்தாவுக்கு ஆதரவாக இருக்கும் சித்தார்த் அன் கோ அவருக்கு எதிராக திரும்பியது ஏன்? கம்பேக் இந்தியன் என்ற ஆதரவு கொடுக்கும் மக்கள், கோ பேக் இந்தியா என்று ஒரு கட்டத்தில் கூட்டமாக துரத்துவது ஏன் என்பது இந்தியன் 2 படத்தின் கரு.

துாய்மை இந்தியா திட்ட விளம்பர பலகையை காண்பித்துவிட்டு, சாலையில் உச்சா போகும்போது ஒருவர் மீது நண்டு ஜெகன் பைக்கில் சென்றபடி சேற்றை வாரி இறைக்கும் சமூக கருத்துடன் படம் தொடங்குகிறது. பாதிக்கப்பட்டவர் ‘பாத்து போய்யானு சொல்ல, ஜெகனோ பாத்ரூம்ல போய்யா’ என்று பன்ச் பேசுகிறார். அட, ஷங்கர் ஆரம்பிச்சிட்டாரு என்று உட்கார்ந்தால் கொஞ்ச நேரம் சித்தார்த் சம்பந்தப்பட்ட சீன்கள் ஓடுகிறது. தாத்தா எங்கய்யா என்று தேடினால், ஒரு கட்டத்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் ஒரு சொகுசு படகில் தொழிலதிபர் ஒருவரை கொலை செய்துவிட்டு சூப்பராக என்ட்ரி ஆகிறார் இந்தியன்  தாத்தா. இந்தியாவி்ல் ஊழல், அட்டகாசம் அதிகமாகிவிட்டது, இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு மாறுவேடத்தில் சென்னை ஏர்போர்ட் வருகிறார். சிபிஐ பிடியில் இருந்து தப்பிக்கிறார். சுகாதாரத்துறை அதிகாரியான டெல்லி கணேசை கடத்தி , தனது பாணியில் ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டு, ‘‘வீட்டுக்கு மரம் நடுவது மட்டுமல்ல, வீட்டில் களைகளை எடுங்கள். உங்கள் வீட்டில் தவறுசெய்பவர்கள் இருந்தால் அவர்களை காட்டிக்கொடுங்கள், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுங்க’’என்று பேஸ்புக் லைவில் புதுசாக அட்வைஸ் செய்கிறார். 

தவறு செய்யும் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், பணக்காரர்களின் வாரிசுகளை தங்கள் வீட்டில் உள்ளவர்களை காட்டிக்கொடுக்க, நாட்டில் மாற்றம் வருகிறது. சித்தார்த் டீமும் அதை செய்ய, என்ன நடக்கிறது. அதனால், சித்தார்த் எப்படி பாதிக்கப்படுகிறார் என்று எமோஷனலாக கதை நகர்கிறது. இந்தியன் தாத்தாவும் தமிழகம் மட்டுமல்ல, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு சென்று அங்கே பெருந்தவறு செய்தவர்களை வர்ம கலையால் பாடம் புகட்டுகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் சித்தார்த் டீம், ஒட்டு மொத்த மக்களும் இந்தியன் தாத்தா மீதுகோபம் கொள்கிறார்கள். அவரை துரத்துகிறார்கள். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்? ஏன் அந்த கோபம் என்பது இரண்டாம் பாகம். கடைசியில், எப்படியெல்லாம் சுதந்திரம் வாங்கினோம் என்று 3ம் பாகத்துக்கு லீடு கொடுத்துவிட்டு படத்தை முடிக்கிறார் ஷங்கர்.

1996ம் ஆண்டு இந்தியன் வந்தது. 28 ஆண்டுகளுக்குபின் இந்தியன் 2 வந்துள்ளது.முதற்பாகத்தை எதிர்பார்த்து , இந்த படத்தை பார்த்தால் பெரிய ஏமாற்றமே மிஞ்சும். இந்தியன் தாத்தா என்ட்ரி, அவர் வர்ம கலையை பயன்படுத்தி சிரிக்க வைத்து கொல்வது, குதிரை மாதிரி ஓட வைத்து கொல்வது, உடலில் தண்ணீரை வற்ற வைத்து கொல்வது புதுசாக இருக்கிறது. அப்புறம், சமூக குறித்த பார்வை, இன்றைய நாட்டின் சூழ்நிலை குறித்த அக்கறை வசனங்கள் ஆகியவை மனதில் நிற்கின்றன. குறிப்பாக, இந்தியன் தாத்தா, பாபிசிம்ஹா சேசிங் சீன் அருமை. வாரிசு அரசியல், 4பேருக்கு மட்டுமே மக்கள் ஒட்டு அளிப்பது போன்றவை துணிச்சல் வசனங்கள்.  
அதேசமயம், பாடிபில்டர்களுடன், சட்டை கழட்டி சிக்ஸ் பேக் காண்பித்து தாத்தா போடும் சண்டை கிரிஞ்ச். கிளைமாஸ் பரபரப்பாக, விறுப்பாக முடியும் என்று நினைத்தால், சட்டப்படி நடக்காத ஒரு விஷயத்தைகாண்பித்து முடித்துஇருக்கிறார்கள். கமல் சம்பந்தப்பட்ட 3 பாகம் லீடு சீன்கள் ரசிக்க வைக்கிறது. ஆனாலும், பழைய இந்தியன் தாத்தாவை ரசித்தவர்கள், இந்த தாத்தாவை அவரை போல பல ஆண்டுகள் நினைவில் வைத்து இருப்பார்களா என்பது சந்தேகமே. ஹீரோவுக்கான மாஸ் சீன்கள் குறைவு.

இந்தியன் 2 படத்தின் முதற்பாகத்தில் கிட்டத்தட்ட ஹீரோ மாதிரி வருபவர் சித்தார்த். ஆரம்பம் முதல் கடைசிவரை இருக்கிறார். அவர் நடிப்பு ஓகே. ஆனால், இடைவேளைக்குபின் செயற்கை தனம் அதிகம். அவரை தவிர நண்டு ஜெகன், பிரியாபவானிசங்கர், ரகுல்ப்ரீத்சிங், தம்பிராமையா, ரேணுகா உட்பட பலர்இருக்கிறார்கள். சமுத்திரக்கனி மட்டுமே மனதில் நிற்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவை காண்பிக்கிறார்கள். ஆனால், சில சீன்களில் ஒரு வித கோமாளிதனத்துடன்  வந்துவிட்டு அவர் சென்று விடுகிறார். மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடிவேணு, மனோபாலா, மாரிமுத்து ஆகிய 4 பேர் படத்தில் வருகிறார்கள். ஷங்கர் படங்கள் சின்ன கேரக்டர் கூட வலுவாக இருக்கும். அற்புமாக நடிக்கும். அதெல்லாம் இதில் மிஸ்சிங். விவேக்கை நீண்ட காலத்துக்குபின் திரையில் பார்ப்பது ஆறுதல். கமலுக்கு ஜோடி இல்லை. 

முதற்பாதி, பிற்பாதியில் பல சமயங்கள் படம் போராடிக்கிறது. குறிப்பாக, இடைவேளைக்குபின் நிறைய காட்சிகள் டிவி சீரியல் மாதிரி ஆகிவிடுகிறது. இது ஷங்கர் படமா என்ற சந்தேகம் வருவது பெரிய மைனஸ். முதற்பாகத்தில் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள், பின்னணி இசை பெரிய பிளஸ். இதில் அனிருத் ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லலாம். அந்த காலண்டர் சாங், தாத்தா வர்றாரு ஓகே ரகம்தான். ரவிவர்மன்ஒளிப்பதிவு பாடலில் மட்டுமே ஓகே. இமான் அண்ணாச்சி சீன் அந்தியன் படத்தில் பார்த்த மாதிரி இருக்கிறது. சிக்ஸ்பேக்கில் கமல் சண்டை போடும் காட்சி, ஐ படத்தை நினைவுபடுத்துகிறது. மனோபாலா சீன்களில் சில இந்தியன் செந்திலை நினைவுபடுத்துகிறது. தாத்தா வர்றாரு சீன் பாய்ஸ் பாடல் பார்த்த பீலிங். இப்படி படத்தில் பல மைனஸ். உங்களுக்கு என்னாச்சு ஷங்கர்சார்?

இந்தியனை 2வது பாகம், 3 வது பாகம் என நினைத்துவிட்டதால் பல சீ்ன்கள் நீளமாக இருக்கிறது. இழு, இழு இழுத்து இருப்பது பார்வையாளர்களை திணற வைக்கிறது. குறிப்பாக, சித்தார்த், சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட எமோஷனல் சீன்கள் முடியலை. இரண்டாம் பாதியில் பல சீன்கள் ரொம்ப நீளம்.  3 வசன கர்த்தா இருந்தாலும், ஒன்றிரண்டு சமூக அக்கறை வசனங்கள் மட்டுமே மனதில் நிற்கிறது. இடைவேளைக்குபின் கமல்ஹாசனே நடிப்பை உணர்ச்சியை வெளிப்படுத்தாமல் தேங்கிவிடுகிறார். இப்படி ஏகப்பட்ட ஏமாற்றங்கள். ஷங்கர் படங்களில் செட் பிரமாண்டமாக இருக்கும். பாடல்களில் ஒரு வித புத்துணர்ச்சி தெரியும். இதில் தங்க மாளிகை செட், சொகுசு படகு செட் மட்டுமே பேசப்படுகிறது. பல மாநிலங்களில் கதை நடந்தாலும், அந்த மாநில தொடர்பு ரொம்பவே கம்பி. இந்தியன் படத்தின் சீன்கள், பாடல்கள், காமெடி, மெசேஜ்  28 ஆண்டுகளாக நம் நினைவில் இருக்கிறது. இந்தியன் 2வுக்கு அந்த வாய்ப்பு ரொம்ப குறைவு. இந்தியன் 3விலாவது மாஸ் காண்பிங்க இந்தியன் தாத்தா
**

ரேட்டிங் 3/5

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow