‘வன்மத்திற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் காலியாகி விடுவோம்’ - இயக்குநர் பா.ரஞ்சித்
சிலசமயம் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் நாம் காலியாகிவிடுவோம் என்று தங்கலான் திரைப்படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரம் இணைந்துள்ள தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது. விக்ரம் உடன் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தங்கலான் திரைப்படம் (Thangalaan Movie) சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும். கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கம் இருப்பது எப்படி கண்டறியப்பட்டது, சுரங்கத்தொழிலுக்காக மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது குறித்த படமாக இது உருவாகி உள்ளது. தங்கலான் திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது. மேக்கிங் மற்றும் திரைக்கதை, இசை என அனைத்து சிறப்பாக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தங்கலான் திரைப்படத்தை தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி மாய யதார்த்தவாதம் [Magical Realism] மூலம் சொல்லி இருப்பதால், அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்தது. ஆனால், பலரும் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா ஆகியோரின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் இசைக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் தங்கலான் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ‘தங்கலான்’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ரஞ்சித், “தங்கலான் வெற்றி விழாவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. முக்கியமான விவாதத்தை தமிழ் சமூகத்தில் தங்கலான் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு பழக்கப்படாத மொழியில் புதிய அனுபவத்தை அவர்களுக்கு கடத்த வேண்டும் என்பது சாதாரண விஷயமல்ல. தங்கலானை சரியாக புரிந்து கொண்டு அதனை கொண்டாடும் மக்களுக்கு நன்றி.
இந்த வெற்றியில் என்னுடன் சேர்ந்து நிறைய பேர் உழைத்துள்ளனர். கடுமையான உழைப்பினால் மட்டுமே ஒரு படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது கிடையாது. அதேசமயம் ஒரு படத்துக்கு உழைப்பு அவசியமானது. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய உழைப்பு தான் என்று நம்புகிறேன். நீங்கள் கொடுக்கும் அன்புதான் என்னை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்தி கொண்டேயிருக்கிறது. சிலசமயம் நம் மீது வன்மம் வரத்தான் செய்யும். ஆனால், அதற்கு பதில் சொல்லும் இடத்தில் நின்றுவிட்டால் நாம் காலியாகிவிடுவோம். அதைத்தான் இந்த வன்மமும் விரும்புகிறது. அதை விட அதிகமான அன்பை பொழியும் நீங்கள் இருக்கும்போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்.
ஒரு படைப்பாளிக்கு ஏன் இந்த அளவுக்கு பாசத்தையும், ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. தமிழகம் மட்டுமல்ல ஆந்திரா, படமே வெளியாகாத மகாராஷ்டிரா, டெல்லி போன்ற வடமாநிலங்களில் நம்மை கொண்டாடுகிறார்கள் என்றால், அதற்கு நான் பேசும் கருத்து தான் காரணம். நம்முடைய கலையை அவர்கள் விரும்புகிறார்கள். அதனை சரியாக புரிந்துகொள்ளும் பல லட்சம் மக்கள் இருக்கும்போது நமக்கு எந்த கவலையுமில்லை என்ற உற்சாகத்தை தங்கலான் கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?