Vaazhai Movie : “எங்களிடம் மாரி செல்வராஜ் இருக்கிறான்..” வாழை படம் பார்த்து நெகிழ்ந்து போன பாரதிராஜா!
Director Bharathiraja Praised Mari Selvaraj Vaazhai Movie : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதேபோல், சிவகார்த்திகேயனும் வாழை படத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Director Bharathiraja Praised Mari Selvaraj Vaazhai Movie : பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் வரிசையில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் நேற்று வெளியானது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது பள்ளிப் பருவத்தில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை பின்னணியாக வைத்து வாழை படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் வெளியான வாழை படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
முன்னதாக மாரி செல்வராஜ்ஜின் வாழை படத்தை தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர். இந்த வரிசையில் தற்போது இயக்குநர் பாரதிராஜாவும் வாழை படம் குறித்து நெகிழ்ச்சியாக விமர்சனம் செய்துள்ளார். “சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பார்த்து யோசித்தது உண்டு. ’வாழை’ அப்படியொரு படம். இந்தப் படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சுப் பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்துள்ளார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்துள்ளார். மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
“சத்யஜித்ரே, ஷ்யாம் பெனகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணிருக்கிறான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறான் என மார்தட்டி சொல்லுவேன்” எனக் கூறியுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மாரி செல்வராஜ், இயக்குநர் பாரதிராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறியிருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன், இயக்குநர் இமயத்திற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க - மாரி செல்வராஜ்ஜின் வாழை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனும் வாழை படத்தை ரொம்பவே புகழ்ந்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என மாரி செல்வராஜ் இயக்கிய படங்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் வாழை படம் மூலம் ஸ்ட்ராங்கான ஃபிலிம் மேக்கராக தன்னை நிரூபித்துள்ளார். தனது வாழ்க்கையை அப்படியே வாழை படத்தில் பிரதிபலித்துள்ளார். மாரி செல்வராஜ் யார் என்பதை இந்தப் படம் மூலம் கண் முன் காட்டியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கதில் எனது ஃபேவரைட் பரியேறும் பெருமாள் தான். இப்போது அந்த இடத்தில் வாழை படம் உள்ளது. இந்தப் படம் பல விருதுகளை வெல்லும், ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனையும் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், “பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள். கர்ணன், மாமன்னன் என்று என் ஒவ்வொரு படைப்பு வரும் போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளை பத்திரப்படுத்தியதை போலவே, இன்று வாழைக்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?






