Madurai AIIMS Construction : மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் எப்போது முடியும்? - மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி

High Court Order on Madurai AIIMS Construction : மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து துவங்க உத்தரவிட கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் எழுத்து பூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Aug 29, 2024 - 12:21
Aug 29, 2024 - 14:33
 0
Madurai AIIMS Construction : மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் எப்போது முடியும்? - மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி
Madurai AIIMS

High Court Order on Madurai AIIMS Construction : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானபணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தமிழத்தில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இடம் தேர்வில் ஏற்பட்ட மூன்றாண்டு போராட்டத்திற்குப் பின் 2018-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 27ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் நிறைவடையவில்லை. 

2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போதும், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போதும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் பிரசார யுக்தியாக பயன்படுத்தின.இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தமானது 26.03.21 அன்று இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது.  எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 படுக்கைகள் கொண்ட தொற்று நோய்ப் பிரிவு ஒன்றையும் மற்றும் சில சேவைகளையும் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. புதிய, திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடி எனவும், அதில் ரூ.1627.70 கோடி ஜைகா கடன் வாயிலாகவும் மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.காலங்கள் கடந்த பின்னரும் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் எப்போது நிறைவடையும் என்று யாராலும் உறுதியாக கூறமுடியவில்லை. 

இந்தநிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை பாஸ்கர் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் மருத்துவர் நோயாளிகளின் விகிதம் அதிக வேறுபாட்டில் இருப்பது,  மருத்துவர்களுக்கு பணிப்பளுவை அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதனை சரி செய்யும் வகையில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை  அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவியாக இருக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ உதவியை பெறவும் வாய்ப்பாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தாலும் 2018 ஆம் ஆண்டுதான் மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வந்து அடிக்கல் நாட்டினார்.

இருப்பினும் இன்னமும் கட்டுமான பணிகள் நடைபெறாமல், நீண்ட காலமாக கிடப்பிலேயே உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது அதில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருந்த போதிலும் இதுவரை மத்திய அரசு கட்டுமான பணிகளை துவங்கவே இல்லை.எனவே  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் சுப்பிரமணியன்,  விக்டோரியா கௌரி  ஆகியோர் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.மத்திய அரசுத்தரப்பில், "கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுவிட்டது. பணிகள் துவங்கி 2026க்குள் நிறைவடைந்துவிடும்" இடையில் கொரோனா காலம் ஏற்பட்டதால் தாமதம் ஆகிவிட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானபணிகள் எப்போது நிறைவடையும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் எழுத்து பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow