நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. பெருக்கெடுத்த வெள்ளம்.. பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் நீடித்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மண்சரிவு ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Jul 16, 2024 - 10:29
Jul 16, 2024 - 14:01
 0
நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை.. பெருக்கெடுத்த வெள்ளம்.. பள்ளிகளுக்கு விடுமுறை
Nilgiris rain update

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அவலாஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை நீடிப்பதால் மாணவர்களின் நலன் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் இந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 37செ.மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. இன்று மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அவலாஞ்சி இயற்கை சுற்றுச்சூழல் மையத்திற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தொடர் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெப்பக் காட்டில் உள்ள தரைபாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் அதிக கனமழையும், வால்பாறை, சோலையார் பகுதிகளில் கனமழையும், ஆழியார், சிறுவாணி, பொள்ளாச்சி, சிங்கோனா ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 12.7 செ.மீ. மழை பதிவானது. வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மற்ற பகுதிகளில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் நேற்று மாலை 7 மணியளவில், உதகமண்டலம், நொண்டிமேடு, சவுத்விக் போன்ற பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளதால் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஊட்டியின் பிரதான சாலையில் மழைநீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இன்று காலையிலிருந்தே ஊட்டி-குன்னூர் சாலையில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.கோடை மழை தங்களை ஏமாற்றிய நிலையில் தற்போது பருவ மழை தொடர்ந்து பெய்து வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow