ஜம்மு: இந்தியாவின் மிக அழகிய மாநிலமான ஜம்மு-காஷ்மீரில் அண்மை காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் வைஷ்ணவிதேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் பட்னோடா பகுதியில் 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் ராணுவ வாகனத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசினார்கள். துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த திடீர் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 5 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதன்பிறகு ஜம்மு-காஷ்மீர் முழுதும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை ராணுவ வீரர்கள் தீவிரப்படுத்தினார்கள். கதுவா மாவட்டம் மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டம் தேசா பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் தடுப்பு சிறப்பு காவல் துறையினர் இணைந்து வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
நமது வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் உடலில் குண்டுபாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். நமது வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் பயங்கரவாதிகள் சிலர் உயிரிழந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதிவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ தளபதி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சிங்கா, ''பயங்கரவாதிகளின் தாக்குலில் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட, பயங்கரவாதிகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றினையும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் ராணுவ வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறினார்.