பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபடின்றி அண்ணாவின் பிறந்தநாளை திமுக, அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அண்ணாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Sep 15, 2024 - 10:41
 0
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
Perarignar Anna Birthday

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமைக்காக குரல் கொடுத்த பேரறிஞர் அண்ணா அதில் வெற்றியும் கண்டுள்ளார். குறிப்பாக உலகின் மூத்த மொழியாம் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அண்ணா நமது மாநிலத்துக்கு ’தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். 

தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளே ஆட்சி அதிகாரம் செலுத்தி வரும் நிலையில், இதற்கு அடித்தளமிட்டது பேரறிஞர் அண்ணா தான். தான் இறக்கும் வரை இந்தி திணிப்பு எதிர்ப்பை முழு மூச்சாக கொண்டிருந்த அண்ணா, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்த முக்கிய காரணமாக விளங்கினார். திரைப்படங்களில் வசனகர்த்தா, இலக்கியவாதி, மிகச்சிறந்த பேச்சாளர் என பன்முக முகம் கொண்ட அண்ணா, மிகவும் எளிமையான அரசியல் தலைவர் என்ற பெயருக்கு சொந்தக்காரராக விளங்கினார். 

இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின்பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் அண்ணாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதேபோல் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பிலும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கீழே அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளருமான, எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபடின்றி அண்ணாவின் பிறந்தநாளை திமுக, அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அண்ணாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow