விநாயகர் சதுர்த்தி.. ஐந்து கரத்தனை வணங்கினால் வினைகள் யாவும் தீரும்

ஐந்து கரத்தினன் எனப்படும் விநாயகர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார்.விநாயகரை வணங்கினால் வினைகள் யாவும் தீரும்.

Aug 20, 2024 - 12:31
Aug 20, 2024 - 12:33
 0
விநாயகர் சதுர்த்தி.. ஐந்து கரத்தனை வணங்கினால் வினைகள் யாவும் தீரும்
விநாயகர் சதுர்த்தி


சென்னை:  கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். வி என்றால் இதற்கு மேல் இல்லை. நாயகர் என்றால் தலைவர். விநாயகர் அஷ்டோத்திரத்தில் ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரி உள்ளது. அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதாகும். துன்பங்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.மகா சங்கடஹர சதுர்த்தி வரும் 22ஆம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் முழு முதற்கடவுளான விநாயகரைப் பற்றி அறிந்து கொள்வோம். 

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் அவதாரம் நிகழ்ந்தாக புராணங்கள் கூறுகின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் செப்டம்பர் 7ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருப்பதனால் கணபதி என அழைக்கப்பட்டார்.நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார்.ஆதிசங்கரர் தனது பஞ்ச ரத்தினம் என்ற விநாயகர் துதியில் அநாயக ஏகநாயகம் என இவரைக் குறிப்பிடுகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாய் எல்லாவற்றிற்கும் தலைவராய் இருப்பவர் என்பதாகும்.


விநாயகர் ஒற்றை தந்தம் இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார். விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார். அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார்.

விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.

விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவ உடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லமை வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார். கணபதியை கையெடுத்து கும்பிட்டால் வினைகள் யாவும் தீரும். சர்வ சக்தியும் வல்லமையும் கிடைக்கும். 

விநாயகர் உணவுப்பிரியர் என்பதால் அவரது அருள் வேண்டுபவர்கள் கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow