அந்தகாசுரனை அழித்த அங்காரகன்.. செவ்வாய் பகவான் அவதாரம் யாருக்காக?.. புராண கதை

நவகிரகங்களில் வீரத்தின் அதிபதியாகவும் ரத்த காரகனாகவும் போற்றப்படும் செவ்வாய் பகவான் அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அங்காரகன் என்றும் மங்களகாரகன் என்றும் அழைக்கப்படும் செவ்வாய் பகவானின் அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.

Jul 2, 2024 - 14:42
Jul 2, 2024 - 14:54
 0
அந்தகாசுரனை அழித்த அங்காரகன்.. செவ்வாய் பகவான் அவதாரம் யாருக்காக?.. புராண கதை
chevvai bhagavan avatharam purana kathai

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும் என்று வேண்டினான். 

அசுரனுக்கு வரம் 

தன்னை நினைத்து தவம் இருந்து வேண்டுபவர்கள் கேட்பதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான். வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் அதிகமானது. அதே கர்வத்தோடு உலா வந்த அசுரன் உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், பொது மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவரையும் துன்புறுத்தினான்.  அசுரனால் பாதிக்கப்பட்ட முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபட்டனர். 

செவ்வாய் அவதாரம்

மக்களின் துயர் தீர்க்க அசுரனுடன் போரிட முடிவு செய்த சிவபெருமான்,  சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரமசிவன் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரண்டு பேருக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன. அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த கதை கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. 

அங்காரகன் 

அந்தகாசுரன் என்ற அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும். பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான். பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

நெருப்பாய் ஜொலிக்கும் செவ்வாய்

செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், செவ்வாய் என்று பெயரை அடைந்தான். கிரேக்க பாசையில் மார்ஸ் எனப் போற்றப்பட்ட இக்கிரகம் நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம் பராக்கிரமம், வீரதீர செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம், ஆண்மை போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். 

சகோதர காரகன் செவ்வாய்

அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவாதாக உள்ள கிரகம். செவ்வாய் சகோதரர்களுக்குக் காரகம் பெற்றவன். அதனால் சகோதர காரகன் என்பர். செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.  ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து முருகப்பெருமானை வணங்குவதாக கூறப்படுகிறது.  சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow