பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஜொலிக்கும் புஷ்கரணி.. பக்தர்களுக்கு அனுமதி

திருமலை ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Sep 2, 2024 - 07:48
Sep 2, 2024 - 18:02
 0
பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில் - ஜொலிக்கும் புஷ்கரணி.. பக்தர்களுக்கு அனுமதி
tirumala tirupati brahmotsavam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பிரம்மோற்சவ விழாவை காண வருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புனித புஷ்கரணி சீரமைக்கப்பட்டு பக்தர்கள் மீண்டும் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையானை தரிசனம் செய்ய தினசரியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்யும் முன்பாக புஷ்கரணியில் நீராட வேண்டும். அதன் பின்னர் வராக சாமியை தரிசனம் செய்து விட்டு மூலவர் ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க வேண்டும். இதுதான் மரபாக உள்ளது. புஷ்கரணி புனித தீர்த்தமாக போற்றப்படுகிறது.

தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதால்  ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, தெப்பக்குளத்தை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டு தூய்மைப் பணி மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி கோவில் தெப்பக்குளம் (சுவாமி புஷ்கரணி) மூடப்பட்டது. தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. புஷ்கரணியில் உள்ள தண்ணீர் மின் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. சேறுகள் அகற்றப்பட்டன.குப்பைகள் வெளியேற்றப்பட்டன. படிக்கட்டுகள், தடுப்பு கம்பி வேலிகள், தளம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.


ஒரு மாத காலம் நடைபெற்ற தெப்பக்குள பராமரிப்பு பணிகள் நேற்றுடன் (31.8.2024) நிறைவடைந்தன. இதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது. 

அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5:45 மணி முதல் 6 மணிக்குள் கொடியேற்றம் - இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி உலா

5-10-20224 காலை 8 மணி சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா - இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனம்

6-10-2024 காலை 8 மணி சிம்ம வாகனம் - இரவு 7 மணி முத்துப்பந்தல் வாகனம்

7-10-2024 காலை 8 மணி கற்பகவிருட்ச வாகனம் - இரவு 7 சர்வபூபால வாகனம்

8-10-2024 காலை 8 மணி மோகினி அவதாரம் - இரவு 6:30 மணி கருட வாகனம்

9-10-2024 காலை 8 மணி ஹனுமந்த வாகனம், மாலை 4 மணி தங்க ரதம் - இரவு 7 மணி யானை வாகனம்

10-10-2024 காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம்: இரவு 7 மணி சந்திர பிரபை வாகனம்

11-10-2024 காலை 7 மணி தேரோட்டம் - இரவு 7 மணி குதிரை வாகனம்

11-10-2024 காலை 6 மணி சக்கர ஸ்நானம் - இரவு 8:30 மணி கொடியிறக்கம்


ஆர்ஜித சேவைகள் ரத்து விஐபி சிறப்பு தரிசனங்கள் ரத்து:

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆர்ஜித சேவைகள், கல்யாண சேவை, தோமலா சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் போது சுவாமியின் வாகன சேவையை காண பொதுமக்கள் வழக்கத்தை விட அதிகளவில் வருவார்கள். எனவே, அவர்களுக்கு திருப்திகரமாக தரிசனம் செய்து வைக்கும் வகையில் அக்டோபர் 3 முதல் 12ம் தேதி வரை பல ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. தரிசனங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் 3ம் தேதி (அங்குரார்ப்பணம்) முதல் 12ம் தேதி வரை (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வரை) தினமும் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 1 வயது குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அன்லிமிடெட் லட்டு:

இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்க சாமி கும்பிட்ட தரிசன டிக்கெட்டுடன் லட்டு கவுன்ட்டருக்கு வரும் பக்தர்களுக்கு தலா ரூ 50 விலையில் அன்லிமிட்டெட்டாக எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வழங்கப்படும். இது இன்று முதல் (செப்டம்பர் 2) அமலுக்கு வருகிறது சிலர் சாமி கும்பிடாமலேயே திருப்பதி மலைக்கு வந்து ஏராளமான லட்டுக்களை வாங்கிச் சென்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் நெருங்கிய உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் லட்டை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow