இந்தியா

Andhra Rain: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை... உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரிப்பு!

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Andhra Rain: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை... உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரிப்பு!
ஆந்திர கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24-ஆக அதிகரிப்பு

சென்னை: ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, விஜயவாடா, மொகல்ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு வீடுகள் மீது விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இதேபோல், உப்பலா பகுதியில் ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஆசிரியர், மாணவர்கள் என 3 பேர் உயிரிழந்தனர். இந்த கனமழையில் மேலும் பலர் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் 37 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதைதொடர்ந்து, அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் படிக்க  - ஃபார்முலா 4 கார் பந்தயம் கோலாகலமாக நிறைவு

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் சத்தீஸ்கரில் வலுவடையும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆந்திர, தெலங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை காரணமாக 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 30 ரயில்கள் வேறு பாதைக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

அதன்படி முதற்கட்டமாக 60 பேர் கொண்ட இரண்டு குழுக்களும், அதனைத் தொடர்ந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவும் ஆந்திர மாநிலம் விரைந்துள்ளனர். அதேபோல், டைசன், பிரின்ஸ் ஆகிய இரண்டு பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் விஜயவாடாவிற்கு கொண்டு செல்லப்பட்டன. இவைகள் மூலம் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தவுள்ளன. ஆந்திரா, தெலங்கானா கனமழையில் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திரவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகளை தடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.