நிம்மதியான தூக்கம் வேண்டுமா.. படுக்கை அறையில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்!

மனமும் உடலும் ஓய்வெடுக்கும் இடத்தில் எந்தவிட இடைஞ்சலும் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் உறக்கம் தடைபடும். எனவே நாம் ஓய்வெடுக்கும் படுக்கும் அறையை வாஸ்து படி அமைக்க வேண்டும். நம் அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம்.

Aug 9, 2024 - 09:52
 0
நிம்மதியான தூக்கம் வேண்டுமா..  படுக்கை அறையில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்!
bedroom vastu tips

மாடி வீட்டில் வசிக்கும் எத்தனையோ பேர் இன்றைக்கு இரவு நேரங்களில் உறக்கம் வராமல் தவிக்கிறார்கள்.மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்க முடியவில்லை என்று பலரும் மன உளைச்சலோடு பாடுவார்கள். உடல் நலக்குறைபாடு காரணமாக பலருக்கும் உறக்கம் வராது. பலரது வீடுகளில் வாஸ்து குறைபாடு காரணமாகவும் தூக்கம் வராது. நிம்மதியான உறக்கம் வருவதற்கு படுக்கை அறையில் என்ன இருக்க வேண்டும் என்ன இருக்கக் கூடாது என்று பார்க்கலாம்.

எந்த திசையில் படுக்கை அறை: 

வீட்டில் உள்ள மாஸ்டர் படுக்கையறையின் திசை வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும். ஒரு குழந்தையின் படுக்கையறை மேற்கு நோக்கி இருக்க வேண்டும். விருந்தினர் படுக்கையறை கிழக்கு நோக்கியதாக இருக்க வேண்டும் மற்றும் ஒரு ஸ்டடி ரூம் தென்கிழக்கு திசையை எதிர்கொண்டு இருக்க வேண்டும். 

அக்னி மூலை: 

தென்கிழக்கு என்பது அக்னி மூலை. சமையல் செய்வதற்கு உரிய இடம். அங்கு உறங்குபவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்காது. தம்பதியர்களுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும். அக்னி மூலை உஷ்ணம் அதிகம் இருக்கும் இடம். இந்த இடத்தில் உறங்கினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். புதுமண தம்பதியர்களுக்கு அக்னிமூலை படுக்கை அறையில் சுகம் தடை பட வாய்ப்பு உள்ளது.

ஈசான்ய மூலை: 

வீட்டின் மையப்பகுதி பிரம்மஸ்தானம். இந்த இடத்தில் படுக்கை அறை அமையக்கூடாது. வடகிழக்குப் பகுதி படுக்கை அறையில் தம்பதியர் உறங்கக் கூடாது. வடகிழக்கு பகுதியில் படுக்கை அறை அமைத்தால் அங்கு உறங்கும் புதுமண தம்பதியினருக்கு உடல் நல பாதிப்பு உள்ள குழந்தைகள் உருவாகும். 
நம்முடைய வீட்டு பூஜை அறையை மட்டுமல்ல படுக்கை அறையையும் நாம் சுத்தமாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு உறக்கம் நன்றாக வரும். தேவையற்ற பொருட்களை படுக்கை அறையில் போட்டு வைக்கக்கூடாது. படுக்கை அறை சரியில்லாமல் இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும் பண இழப்பும் வருமாம். 

நூலகம் வேண்டாம்: 

தென்மேற்கு அறையின் தென் மேற்கு மூலையில் ஜன்னல் இருந்தால் செல்வ இழப்பும், அதிகார பறிப்பும் நிகழும். சிலர் படுக்கை அறை செல்பில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். படுக்கை அறையில் நூலகம் வேண்டாம். அதே போல படுக்கை அறையில் கம்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை வைக்க வேண்டாம். படுக்கை அறைக்கான திசை தென்மேற்கு சிறப்பானது. 

படுக்கை அறை ஓவியங்கள்:

படுக்கை அறை சுவரில் கத்தி, சண்டையிடும் போர்வீரன், ஆடு, மாடு, மான் தலைகள், புலி, சிங்க உருவங்களின் படங்களை வைக்கக்கூடாது. காதலை / அன்பை தூண்டும் ஓவியங்கள், படங்கள் இடம் பெறுவது நல்லது. ஜோடியான பறவைகள், பீனிக்ஸ் பறவைகள், டிராகன், மீன்கள், இரட்டை வாத்துக்கள், ஹம்மிங் பறவைகளின் ஓவியங்களை மாட்டி வைக்கலாம்.

உறங்கும் திசை முக்கியம்:

தூக்கம் மனிதனுக்கு எப்படி அவசியமோ, அதேபோல் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் எப்படி ஒரு வீட்டை வாங்கும் போது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று பார்க்கிறோமோ, அது போல நாம் தூங்கும் திசையையும் சரியான திசையில் இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கினால் உடல் நலம் பாதிக்கும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம், உடல்நலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். 


வெற்றி கிடைக்கும்:

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது. கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள், உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும். முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, மறுநாள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் நடமாடலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி தேடி வரும் உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

நிம்மதியான உறக்கம்:

படுக்கை அறை பெயிண்ட் இளம் வண்ணங்களில் இருப்பது சிறப்பு. இளம் நீளம், பிங்க், இளம் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசுவது சிறப்பு. அதே போல படுக்கை அறையின் சீலிங் வெண்மை நிறத்தில் இருப்பது சிறப்பு. இரவு நேர விளக்கு சிவப்பு நிறத்திலோ இளம் ஊதா நிறத்திலோ சிறப்பு. காதல் ஓவியங்கள், ரதி மன்மதன் சிலையை படுக்கை அறையில் தென்மேற்கு மூலையில் வைப்பது மனதிற்கு இதம் தரும். உறக்கமும் நிம்மதியாக இருக்கும்.


பரிகாரம் என்ன: 

வடக்கு திசையில் தலை வைத்து உறங்கக்கூடாது. ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். நாம் உறங்கும் போது கதவை நோக்கி கால்கள் இருக்கக் கூடாது. இதனால் நல்ல சக்தி கால்வழியாக வெளியேறி கதவு வழியே சென்று விடுவதால் சோம்பல் அதிகரிக்கும். பரிகாரமாக ஓசை எழுப்பும் மணியை தொங்க விட்டு அவ்வப்போது எழும் ஓசையால் குறைபாடு நீங்கப் பெறலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow