ஆம்ஸ்ட்ராங் கொலை.. யாராக இருந்தாலும் விடாதீர்கள்..சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிச்சாமி

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கண்டறிய முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்த படுபாதக செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Jul 9, 2024 - 17:56
Jul 10, 2024 - 18:04
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை.. யாராக இருந்தாலும் விடாதீர்கள்..சிபிஐ விசாரணை கேட்கும் எடப்பாடி பழனிச்சாமி
Edappadi palanisamy

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் காவல் நிலைய காவல்துறையினர் 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.இதைதொடர்ந்து, மறைந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39) மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், இந்த கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவரைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். 
இதனையடுத்து தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன். 

இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக 
திரு. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow