மஹா விஷ்ணு தீவிரவாதி கிடையாது.. வழக்கை சட்டப்படி சந்திப்போம் - வழக்கறிஞர் பேட்டி
மஹா விஷ்ணு சமூக விரோதியோ அல்லது தீவிரவாதியோ கிடையாது என்றும் வழக்கை சட்டரீதியாக சந்திப்போம் என்றும் மஹா விஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்ஜென்மம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மகா விஷ்ணு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அப்போது, முன் ஜென்மத்தில் தவறுகள், பாவங்கள் செய்ததால் தான் இப்போது மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள் என பேசியிருந்தார்.
அப்போது அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் மாற்றுத்திறனாளி ஆசிரியரான சங்கர், மகா விஷ்ணுவின் கருத்து தவறு என எதிர்ப்புத் தெரிவித்தார். அதனையடுத்து மகா விஷ்ணுவுக்கும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மகா விஷ்ணுவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மகா விஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என்றும், அவரை இப்படி பேச அனுமதித்தது யார் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில் மஹா விஷ்ணு தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. தற்போது நான் ஆஸ்திரேலியாவில் உள்ளேன். நாளை சென்னைக்கே வருகிறேன்” என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்த மகாவிஷ்ணுவை காவலர்கள் எங்கே வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவில்லை. இந்நிலையில் கைதான மகாவிஷ்ணுவை தேடி அவரது சகோதரர் காவல் நிலையம், காவல் நிலையமாக வழக்கறிஞர்களுடன் அலைந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவிற்கு 20.09.2024 வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலமுருகன், “மாற்றுத்திறனாளி சங்கத்தை சேர்ந்த விஜயராஜ் என்பவர் மஹா விஷ்ணு புகார் கொடுத்திருந்தார். அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு சட்டத்தின் கீழ் மஹா விஷ்ணுவை கைது செய்துள்ளார்கள். விமான நிலையத்தில் ஏசி தலைமையில் கைது செய்தனர்.
மேலும் கைது செய்த தகவலை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. அவரை கைது செய்த தகவலை காவல்துறையினர் அவரது வீட்டுக்கும் சொல்லவில்லை. ஒருவரை கைது செய்யும் முன்பு அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அதை காவல்துறை செய்யவில்லை.
நாங்கள் காலையிலிருந்து மாலை வரை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் காத்திருந்தோம். ஆனால், சைதாப்பேட்டையில் இருந்து நாங்கள் வருவதற்கு முன்பு மஹா விஷ்ணுவை ரிமாண்ட் செய்துவிட்டார்கள். திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு நீதிமன்றம் வரும். அதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்
சங்கர் என்பவர் இங்கும் புகார் கொடுக்கவில்லை. சைதாப்பேட்டையில் உள்ள மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் புகார் கொடுத்ததன் மூலம் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
மஹாவிஷ்ணு சமூக விரோதி கிடையாது; தீவிரவாதி கிடையாது. அவரை 200 காவலர்கள் விமான நிலையம் சென்று, அவரை கைது செய்து அழைத்து வரவேண்டிய அவசியமில்லை. அவ்ளோ பெரிய ஆளும் அவர் கிடையாது. எந்த தலைமுறைவும் ஆகாமல் அவரே பேட்டி கொடுத்து நாளை மதியம் சென்னை வருவேன் என்று கூறினார். அவருக்கு எந்த பயமும் இல்லை.
காவல்துறையினர் அவரிடம் வாக்குமூலம் வாங்க வேண்டும், விசாரிக்க வேண்டும், என்று அவரை அழைத்துச் சென்று மன உளைச்சலுக்கு ஆளாக்கி, கடைசி ஒரு மணி நேரத்துக்கு முன்பு அவரை ரிமாண்ட் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?