சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் 2 பேர் மரணம் - நிவாரண உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காளையார்குறிச்சி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

Jul 9, 2024 - 18:09
Jul 9, 2024 - 18:45
 0
சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் 2 பேர் மரணம் - நிவாரண உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
MK Stalin Announces Relief For Death in Sivakasi Firecrackers Factory Blast

சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கையா என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது இதுநாக்பூர் லைசன்ஸ் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான  பேன்சி ரக வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணி மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த அறை வெடித்து சிதறியது. 

அறையில் வேலை பார்த்த மாரியப்பன், முத்துவேல் இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சரோஜா , சங்கரவேல் இரண்டு தொழிலாளர்கள் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைக் கேள்விப்பட்ட சிவகாசி தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை, போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து எம்.புதுபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் சிவகாசி சார்-ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்து  குறித்து ஆலையின் உரிமையாளர் முருகவேல், மேலாளர் பன்னீர் செல்வம், போர்மேன் குணசேகரன் ஆகிய 3 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, விபத்து ஏற்படும் என தெரிந்தே கவனக்குறைவாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு,தலா 3 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காளையார்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (09-07-2024) காலை 09.15 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், வெள்ளூர், சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 45) த/பெ.பெருமாள் மற்றும் முத்துமுருகன் (வயது 45) த/பெ.பரமசிவம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த சங்கரவேல் (வயது 52) த/பெ.கூடலிங்கம் மற்றும் சரோஜா (வயது 50) க/பெ. கொடக்காரசின்னு ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow