Pondicherry Rain: புதுச்சேரியில் அடித்து நொறுக்கிய கனமழை... கரைபுரண்டோடிய வெள்ளம்... மக்கள் அவதி!
புதுவையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பாண்டிச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. நள்ளிரவு சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழையால், முக்கிய சாலைகளிலும், குடியிறுப்பு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியொடு பாதித்தது. இதனையடுத்து புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் அயப்பாக்கம், திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் குண்டு குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கி வாகனஓட்டிகள் சிரமமடைந்தனர். அத்துடன், போரூர், வானகரம், மதுரவாயல், காரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக போரூர் மேம்பாலத்தின் கீழே மழை நீரானது குளம் போல் தேங்கியதால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 13 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இன்று முதல் வரும் 13ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க - குற்றாலம் சாரல் திருவிழா.. கொண்டாட தயாராகும் சுற்றுலா பயணிகள்
இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், மதுரை மாநகரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
What's Your Reaction?