மருத்துவமனைக்குள் காவல்நிலையம்... விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை.. மா.சு. உறுதி!

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Nov 14, 2024 - 09:08
 0
மருத்துவமனைக்குள் காவல்நிலையம்... விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை.. மா.சு. உறுதி!
மருத்துவமனைக்குள் காவல்நிலையம்... விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை.. மா.சு. உறுதி!

தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கழுத்து, காதுக்கு பின்புறம், நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கலைஞர் மருத்துவமனையில் இன்று ஒரு அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. மறைத்து வைத்து கொண்டு வந்த கத்தியின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவர் பாலாஜி அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

விக்னேஷின் தாய் மிகவும் சிரமத்தில் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனது தாய்க்கு சரியான மருத்துவ சேவை அளிக்கவில்லை என விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது தவறு! இந்த போக்கு மிகவும் கண்டனத்துக்குரியது. சிறந்த சேவை மூலம் மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய நம்பிக்கை பெற்றவர்களாக மருத்துவர்கள் உள்ளனர். 

விக்னேஷ் ஒரு போலியான காரணத்தை சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளார். பல்வேறு திட்டங்கள் மூலம் மருத்துவர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். விக்னேஷ் உடன் வேறு யாரேனும் வந்தார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகபட்சமான நடவடிக்கை என்னவாக இருக்குமோ அந்த நடவடிக்கை விக்னேஷ் மீது  எடுக்கப்படும். 

மருத்துவ சங்கம் சார்பில் வேலை புறக்கணிப்பு போராட்டம் அறிவித்திருந்தார்கள் . போராட்டம் அறிவித்த சங்கங்களின் முக்கிய தலைவர்களை அழைத்து பேசினோம். சங்கத் தலைவர்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை இந்த கூட்டத்தில் தெரிவித்தார்கள். மருத்துவமனைகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் பெரும் கோரிக்கையாக இருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிசிடிவி பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். பெரும்பாலும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. 

மேலும் நோயாளிகளின் அட்டெண்டர் வருகையை குறைக்க வேண்டும் என மருத்துவ சங்கத்தின் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அட்டெண்டர்களுக்கு விரைவில் அடையாள அட்டை கொடுக்கும் பணி செயல்படுத்தப்படும்.

மருத்துவமனைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அரசு மருத்துவமனைகளுக்குள் சிறிய காவல் நிலையம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளின் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்கள் அவர்களிடம் தொடர்ந்து தெரிவித்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து அவர்களிடம் மருத்துவர்கள் சொல்லாமல் இருந்ததில்லை. 

மருத்துவ சங்கத்தின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளை எந்த போராட்டமும் இல்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தவர் யாரும் இல்லை. சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர்கள்தான். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறுவதற்கான இடம் கொடுக்கக்கூடாது. விக்னேஷின் தாய்க்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை வேண்டுமென்றால் தாராளமாக சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவர் பாலாஜி நல்ல நிலைமைக்கு வந்த பிறகு, இருவருக்கும் என்ன பிரச்சனை என்பது குறித்து கேட்டறிய உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow