குற்றாலம் சாரல் திருவிழா.. கொண்டாட தயாராகும் சுற்றுலா பயணிகள்..என்னென்ன ஏற்பாடுகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வருடம் தோறும் குற்றால சாரல் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு சாரல் திருவிழா 16ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Aug 10, 2024 - 07:47
 0
குற்றாலம் சாரல் திருவிழா.. கொண்டாட தயாராகும் சுற்றுலா பயணிகள்..என்னென்ன ஏற்பாடுகள்
courtallam season cool saral festival

தென்னகத்தின் இயற்கை ஸ்பா குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குற்றாலத்திற்கு வரும் பயணிகளை கவரும் வகையில் 4 நாட்களுக்கு சாரல் திருவிழா நடைபெறும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான  குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் சீசன் களைகட்டுவது வழக்கம்.மெயின்பால்ஸ், ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மூலிகை வனத்தின் வழியே ஓடி வந்து கொட்டும் அருவியில் குளித்து மகிழ்வது ஆனந்தமாக இருக்கும். இயற்கையாக மசாஜ் செய்து விட்டது போல அருவியில் குளிப்பது அற்புதமாக இருக்கும். 

நடப்பாண்டு ஜூன் மாதமே பருவமழை கேரளாவில் தொடங்கியதால் இந்த ஆண்டு சீசன் அற்புதமாக உள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால்  சீசனை அனுபவிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து கொண்டுள்ளனர்.தினசரியும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து  மகிழ்கின்றனர்.

இந்த நிலையில் மழைக்கால சீசன் காலகட்டங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வருடம் தோறும் குற்றால சாரல் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சையாக  நடத்தப்படுவது வழக்கம். கடந்த வருடம் பருவமழை ஏமாற்றியதால் சாரல் திருவிழாவானது நடை பெறவில்லை. இந்த ஆண்டு சாரல் திருவிழாவை நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், வருகின்ற 16, 17, 18, 19 ஆகிய நான்கு தினங்களில் சாரல் திருவிழாவானது நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.இது குறித்த செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

நான்கு நாட்கள் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.மேலும், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து 16 முதல் 18ஆம் தேதி வரை ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே  எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், இராமச்சந்திரன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow