DMK Youth : தாறுமாறாக கார் ஓட்டிய திமுக இளைஞர்கள்.. புகார் கொடுத்தவர்களை மிரட்டுவதா? அதிமுக பகீர்

ADMK Workers Complaint on DMK Youths Car Ride : திமுக கொடி காட்டிய கார்களில் வந்து மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் தாறுமாறாக வட்டமடித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய இளசுகளுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

Aug 6, 2024 - 15:35
Aug 6, 2024 - 15:43
 0
DMK Youth : தாறுமாறாக கார் ஓட்டிய திமுக இளைஞர்கள்.. புகார் கொடுத்தவர்களை மிரட்டுவதா? அதிமுக பகீர்
ADMK Workers Complaint on DMK Youths Car Ride Issue

ADMK Workers Complaint on DMK Youths Car Ride : திமுக கொடி கட்டிய காரில் சாலையில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டதோடு பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வீடியோ கொடுத்து புகார் கொடுத்தும், புகார் கொடுத்தவர்களையே காவல்துறை மிரட்டுவதாக அதிமுக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது

சென்னை புறநகரான மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அவ்வப்போது சாகசங்களில் ஈடுபடுவதும், பைக் ரேஸ் செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரியவந்து நடவடிக்கை எடுத்தும், ரேஸ்களில் ஈடுபடுபவர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. அண்மையில் கூட ஆட்டோ, கார், பைக்  என்று இரவில் நடந்த ரேஸின்போது ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 

இந்தசூழலில், அதே மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில், திமுக கொடி கட்டிய கார்களில் வந்த இளைஞர்கள் சிலர் தாறுமாறாக வாகனத்தை இயக்கிய படியும்,  காரின் மேற்கூறையை திறந்து வைத்து நின்றபடி சப்தம் எழுப்பியும், சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியபடி முன்னேறிச் சென்றுள்ளனர். அதே போல ஒரே இடத்தில் நான்கைந்து கார்களில் வந்து புழுதி பறக்க வட்டமடித்து சாகஸத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

திமுக கொடிகட்டிய காரில் வந்த இளசுகளின் இந்த அட்டகாசம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.இந்த வீடியோ தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார்,   விசாரணை மேற்கொண்டு, ஆபத்தான முறையில் அதிவேகமாக காரை இயக்கியதற்காக நவீன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை தங்களது எக்ஸ் தள பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர்.ஆனால் இந்த நடவடிக்கை கூட அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

திமுக கொடியுடன் காரில் வந்து அலப்பறையில் ஈடுபட்ட இளைஞர்கள் குறித்த வீடியோவை வேலூர் அதிமுக ஐடிவிங்கை சேர்ந்த ஹேமந்த்குமார் என்பவர், எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர்  தொடர்ச்சியாக தொடர்புகொண்டு அவரது வீட்டு முகவரி போன்ற தனிநபர் விவரங்களைக் கேட்டு மிரட்டும் தொனியில் பேசியுள்ளதாக அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டு முகவரி போன்ற தனிநபர் விவரங்களைக் கேட்டு மிரட்டும் தொனியில் பேசி வருவதாக அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகி ராஜ்சத்யன் குற்றம் சாட்டியுள்ளார். ஹேமந்த் குமார் தன்னுடைய பதிவில் கார் எண்ணை தெளிவாக பதிவிட்டுள்ள நிலையில், காவல்துறை நியாயமாக செயல்பட்டிருந்தால் அந்த கார் உரிமையாளரை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக, பதிவிட்டவரை தொடர்பு கொண்டு மிரட்டல் தொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது. 

சமூக ஊடகங்களில் யாரும் இந்த அரசையோ, ஆளுங்கட்சியின் அராஜகங்களையோ புகார் அளிக்கவே கூடாதா? காவல்துறையாக செயல்படுங்கள்- திமுக அரசின் ஏவல்துறையாக அல்ல! ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்! ஹேமந்த் குமாரை தொடர்பு கொண்டு, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அச்சுறுத்தியவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது அதிமுக ஐடி விங் சார்பில் சட்ட நடவடிக்கை தொடரப்படும்.” என எக்ஸில் பதிவிட்டுள்ளார். 

அதிமுகவினர் மட்டுமல்லாது பாஜகவினரும் இந்த வீடியோவை பகிர்ந்து காருக்குள் செல்போன் பேசிய டிடிஎஃப் வாசனை கைது செய்த காவல்துறையினர், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் இதுபோன்ற அராஜகம் செய்பவர்களை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.ராஜ்சத்யன் பதிவிட்டதன் தொடர்ச்சியாகவே காவல்துறையினர் காரில் ஆபத்தான முறையில் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow