கன்னித்தீவு கதையாக நீளும் செந்தில் பாலாஜியின் காவல் .. ஜாமின் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் முடிவு என்ன?

Senthi Balaji Bail Case : செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை வரும் ஜூலை 22ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 46வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Jul 12, 2024 - 16:55
Jul 13, 2024 - 10:21
 0
கன்னித்தீவு கதையாக நீளும் செந்தில் பாலாஜியின் காவல் .. ஜாமின் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் முடிவு என்ன?
Senthi Balaji Bail Case

Senthi Balaji Bail Case : சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 46வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரியும், விசாரணைக்கான காலக்கெடு குறித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கேட்டும், செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஜூலை 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இன்றும் நாளையும் மற்றொரு வழக்கில் ஆஜராக இருப்பதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரினார். இதற்கு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கை நீட்டிப்பதாக குற்றம்சாட்டினார். எனினும் துஷார் மேத்தாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஜாமின் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (ஜூலை 12) ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow