"90 கிட்ஸ்"களின் திருமணத்திற்கு வேட்டுவைத்த பெருசு... கடுப்பாகி போஸ்டர் ஒட்டிய இளைஞர்கள்...
ஊரெங்கும் அடித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரை பார்த்தாவது திருந்துவாரா என ஏக்கத்துடன் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
இளைஞர்களின் திருமணத்தை தடுக்கும் முதியவரை கண்டித்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஊரெங்கும் போஸ்டர்களால் ஒட்டியுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி ஊரைச் சேர்ந்த வயதான நபர் ஒருவர் ஊருக்குள் திருமணம் ஏதேனும் நிச்சயிக்கப்பட்டால், உடனடியாக அந்த வீட்டு நபர் குறித்து தவறாக தகவல் அனுப்பி திருமணத்தை நிறுத்துவதை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வருவதாக அங்குள்ள இளைஞர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.
முதியவரின் இந்த செயலால் பொன்னாக்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட "90 கிட்ஸ்" இளைஞர்கள் திருமணம் ஆகாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்தின் மீது அந்த முதியவருக்கு என்ன வெறுப்பு என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஊருக்குள் யாருக்காவது திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே மணமக்களின் வீட்டிற்கு மொட்டை கடுதாசி அனுப்பி மணமகனை பற்றி தவறாக சித்தரித்து அந்த முதியவர் கல்யாணத்தை நிறுத்தி வருவதாக இளைஞர்கள் பொருமுகின்றனர்.
தானும் வாழாமல் மற்றவர்களையும் வாழ விடாமல் தடுக்கும் இந்த பெருசு ஊரெங்கும் அடித்து ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டரை பார்த்தாவது திருந்துவாரா என ஏக்கத்துடன் இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
இவ்வாறாக செயல்படும் சிலரின் பெயர் தெரியும் என்றும் இனியும் அவர்கள் திருந்தவில்லை என்றால் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஊர் எங்கும் ஒட்டப்படும் எனவும் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். கொந்தளித்த இளைஞர்கள் ஊரெங்கும் போஸ்டர அடித்து ஒட்டி உள்ளனர்.
நெல்லை புறநகர் பகுதிகளில், பொன்னாக்குடி கிராமத்தை இளைஞர்கள் ஒட்டியுள்ள அந்த போஸ்டரில்,
வன்மையாக கண்டிக்கிறோம்!!
ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே
நீ எத்தனை வருஷம் நல்லா வாழ்ந்திருவ?
உன் பிள்ளைக்கு இந்த மாதிரி வந்தா?
கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறாயே?
புறம் பேசி தடுக்க நினைக்கிறேயே?
ஒருத்தனுக்கு நல்லது நடக்கிறதை கெடுக்க நினைக்கிறயே நல்ல்லா இருப்பியா நீ?
- என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சில நபர்களின் அடையாளம் தெரியும், அடுத்த போஸ்ட்ரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னாக்குடி ஊரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊரெங்கும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிந்து, அவர்களும் இது குறித்து விசாரித்து வருவதாக வருகின்றனர்.
What's Your Reaction?