CM Stalin Visit : அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஆகஸ்ட் 22 முதல் சுற்றுப்பயணம்.. யாரை எல்லாம் சந்திப்பார்?

CM Stalin USA Visit : முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Jul 27, 2024 - 07:38
Jul 27, 2024 - 11:53
 0
CM Stalin Visit : அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஆகஸ்ட் 22 முதல் சுற்றுப்பயணம்.. யாரை எல்லாம் சந்திப்பார்?
mk stalin visit usa

CM Stalin USA Visit : ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின்   15 நாட்கள் வரை தங்கியிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக வம்சாவளியினரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. 2 நாள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிறிய அளவில் பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகள், லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு, அந்த நாடுகளின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் ஏராளமான முதலீட்டாளர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்கள் செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இந்த பயணம் ஜூலை மாதத்தில் இருக்கும் என முன்பு கூறப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை தேர்தல் பணியை தொடர்ந்து, பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாக்கள் மற்றும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா காரணமாக முதல்வரின் பயணம் ஆகஸ்ட் 3-வது வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல, மத்திய அரசிடம் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில், முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு ஆகஸ்ட் 22 முதல் 15 நாள் பயணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு 15 நாட்கள் வரை அவர் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக வம்சாவளியினரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வருடன் அமைச்சர் டிஆர்பி ராஜா, முதல்வரின் செயலர்கள், தொழில் துறை செயலர், தொழில் வழிகாட்டி நிறுவன அதிகாரிகளும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow