தவெக கொடி ஏற்றி அரசியலில் அடி எடுத்து வைக்கும் விஜய்.. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜாதகம் சாதகமா?

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் நடிகர் விஜய். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை குறி வைத்து அரசியலில் அடி எடுத்து வைத்துள்ள நடிகர் விஜய்க்கு ஜாதகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Aug 22, 2024 - 09:20
 0
தவெக கொடி ஏற்றி அரசியலில் அடி எடுத்து வைக்கும் விஜய்.. 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜாதகம் சாதகமா?
tvk flag hoisting vijay ready for 2026 assembly election


சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டாலும் அதிகாரப்பூர்வமாக இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றியுள்ளார். இனி எல்லா ஏரியாவிலும் நம்ம கொடிதான் பறக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் விஜய். விஜய் அடி எடுத்து வைத்து அரசியல் பயணத்தின் பாதை எப்படி இருக்கும்? 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி கிடைக்குமா? ஜாதகம் சாதகமாக என்று பார்க்கலாம். 

சினிமா டூ அரசியல்: 

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர்,சிவாஜி,ஜெயலலிதா, எஸ்எஸ்ஆர்பாக்யராஜ், டி.ராஜேந்தர்,விஜயகாந்த்,சரத்குமார், கமல் வரிசையில் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். அதற்கு முன்னோட்டமாகவே பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தது போல கட்சி பெயரை அறிவித்த விஜய் இன்று கட்சி கொடியையும் கொள்கை பாடலையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி:

நடிகர் விஜய் கடகராசி பூச நட்சத்திரம் கன்னி லக்னத்தில் பிறந்தவர். ஜூன் மாதம் 22ஆம் தேதி 1974ஆம் ஆண்டு பிறந்த விஜய்க்கு தற்போது பொன்விழா ஆண்டு. தசாபுத்தியை பார்த்தால் தற்போது சுக்கிரதிசை நடைபெறுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு விஜய்க்கு சுக்கிரதிசைதான் உள்ளது. எனவேதான் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் விஜய். 

சட்டசபை தேர்தல் இலக்கு: 

நடிகர் விஜய்யின் இலக்கு 2026 சட்டசபை தேர்தல் என்பதை விட 2031ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான். தற்போது 50 வயதாகும் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னை தயார் படுத்தி வருகிறார். அதற்கான முன்னோட்டமாகவே தொண்டர்களையும் நிர்வாகிகளையும் தயார்படுத்தி வருகிறார் விஜய். 

அஷ்டமத்து சனியில் கட்சி தொடக்கம்

நடிகர் விஜய்க்கு தற்போது கோச்சாரப்படி அஷ்டமத்து சனி நடைபெறுகிறது. அஷ்டமத்து சனி காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க மாட்டார்கள் என்று சொல்வார்கள் ஆனால் விஜய் கட்சி பெயரை அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கி விட்டார். அதற்குக் காரணம் அவரது நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் நிறைந்த பூச நட்சத்திரம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அவருக்கு எல்லாமே சாதகமாகவே இருக்கிறது என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

குரு செவ்வாய்  யோகம்: 

2026ஆம் ஆண்டு சனி பகவான் பாக்ய சனியாக 9ஆம் இடத்திற்கு இடம் மாறிய பிறகுதான் அவர் தனது அரசியல் பயணத்தில் வேகமெடுக்க ஆரம்பிப்பார். குரு பகவானும், செவ்வாய் பகவானும் விஜய் ஜாதகத்தில் சாதகமாக இருப்பதால் அவரது போஸ்டர்கள் பேனர்களில் மஞ்சள், சிவப்பு இடம் பெற்றுள்ளது. விழாக்களில் விஜய் அணியும் ஆடைகளின் நிறங்களும் மஞ்சள் வர்ணத்திலேயே இருக்கிறது. 

ஜாதகம் சாதகமே:

நடிகர் விஜய்க்கு ஜாதகம் சாதகமாகவே உள்ளது என்றும் கிரகங்களின் ஆதரவு இருப்பதால் மக்களின் ஆதரவோடு அவர் மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆழம் பார்க்கும் விஜய் 2031ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மிகப்பெரும் அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்றும் கணித்துள்ளனர். நடிகர் விஜய் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்வதற்கு பெண்களின் ஆதரவும் அதிகம் கிடைக்கும் என்றும் கணித்திருக்கின்றனர் ஜோதிடர்கள். எனவேதான் கட்சி ஆரம்பிக்கும் முன்பாகவே நான் நீ என்று இப்போதே கூட்டணிக்கு முன்பதிவு செய்து வைக்கின்றனர். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும் நடிகர் விஜய் அரசியலில் சாதிப்பாரா பார்க்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow