DMK Candidates in Upcoming Elections : திமுக ஒருங்கிணைப்பு குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி என சீனியர்கள் இடம்பெற்றிருந்தாலும், அமைச்சர் உதயநிதி தலைமையில்தான் இத்தேர்தலை திமுக எதிர்கொள்ளவுள்ளது. பொதுவெளியில் தொண்டர்கள் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தகட்ட தலைமையாக உதயநிதி உருவெடுத்துள்ளதால், அவரது விசுவாசிகளுக்கு 2026 தேர்தலில் அதிகம் வாய்ப்பு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையை பொறுத்தமட்டில் முக்கால்வாசி தொகுதிகள் திமுகவின் முக்கிய புள்ளிகள் எம்.எல்.ஏவாக உள்ளனர். சில தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பக்கபலமாக தளபதியாக இருந்தவர் ஜெ.அன்பழகன். திமுக ஆட்சியை பிடித்தால் கட்டாயம் அமைச்சர் ஆக்கப்படுவார் என்ற பேச்செல்லாம் இருந்தது. ஆனால், 2021 தேர்தலுக்கு முன்பே அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் அக்குடும்பத்தை கவுரவப்படுத்தவதற்கு அவரது தம்பி ஜெ. கருணாநிதிக்கு தியாகராயநகரில் வாய்ப்பு வழங்கி மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
மேலும் படிக்க - திமுக பவள விழா மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள்!
மேலும் அன்பழகனின் மகன் ராஜாவிற்கு மாவட்ட இளைஞணி அமைப்பாளர் பதவியும், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியும் வழங்கியது. இந்நிலையில் ஜெ. கருணாநிதி செயல்பாடுகள் தலைமைக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 2026 தேர்தலில் அதிமுக சார்பில் சென்னையின் முக்கிய முகமாக அறியப்பட்ட தி.நகர் சத்யா மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவருக்கு கருணாநிதியால் ஈடுகொடுக்க முடியுமா என தெரியவில்லை. இதனால், ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவிற்கு இம்முறை வாய்ப்பு வழங்கலாமா என தலைமை பரீசிலித்து வருவதாகத் தெரிகிறது. மேலும் உதயநிதிக்கு நெருக்கமாக ராஜா உள்ளதால் தி.நகர் தொகுதி ஆப்சனில் ராஜா பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதேபோல், எழும்பூர் தொகுதி பொதுவாகவே திமுகவின் கோட்டை என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது திமுகவை சேர்ந்த பரந்தாமன் எம்.எல்.ஏ-வாக உள்ளார். இவர் மீது எவ்வகை புகாரும் இல்லாத நிலையில், இவரை தொகுதி மாற்றி களமிறக்கலாம் என தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, பூந்தமல்லியில் பரந்தாமனை தயார்படுத்துவதாக தெரிகிறது. தற்போது மாநில அயலக அணி துணை செயலாளராகவும் மாநகராட்சி கவுன்சிலராக உள்ள பரிதி இளம்சுருதி பெயர் எழும்பூர் வேட்பாளர் பட்டியலில் அடிபடுகிறது. இவரது தந்தை பரிதி இளம்பரிதி எழும்பூர் தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ-வாக இருந்து அமைச்சராக பணியாற்றியவர். மேலும் அயலக அணி செயலாளர் எம்.பி எம்.எம். அப்துல்லா மூலம் தலைமையை அணுகி அதற்கான ஏற்பாட்டை செய்து வருவதாக தெரிகிறது.