DMK District Secretaries Meeting 2024 : திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய ‘தென் திசையின் தீர்ப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது. அதனை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர் பாலு பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் கலைஞர் கருணாநிதியின் நாணயம் வெளியீடு தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் இனிமை மிகுந்த தமிழைத் தன் நா நயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த கலைஞர், நாணயத்திலும் ’தமிழ் வெல்லும்’என்பதை நிறுவியிருக்கிறார் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழா, எளிய விழா என்பதால் சென்னை அதன் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும். தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளன. கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சி முதல் மக்களவைத் தேர்தல் வரை, பத்து தேர்தல்களில் வெற்றியை தேடித் தந்த திமுக தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தும், கழக நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், திமுகவின் பவள விழாவை சென்னையில் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே துறையின் திட்டங்களில் கூட பாரபட்சம் காட்டும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கலைஞரின் வழியில் மாநில உரிமைகளை காத்திடுவோம் என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்துள்ளதாகவும், அதனை வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றாலும் ஆட்சியை கவனிப்பேன். கட்சியையும், ஆட்சியையும் கவனித்துக்கொண்டுதான் இருப்பேன். திமுகவை சேர்ந்த சில மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரனை நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக முப்பெரும் விழா | DMK | MK Stalin#DMK | #MKStalin | #chennai | #Kumudamnews24x7 pic.twitter.com/hq3a5FfL7E
— KumudamNews (@kumudamNews24x7) August 16, 2024