Nagai To Sri Lanka Passenger Ferry Service Booking Open : நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படவுள்ளதாக வெகு நாட்களாகவே கூறப்பட்டு வந்தது. இதற்காக அந்தமானில் இருந்து ‘சிவகங்கை’ என்ற கப்பல் கடந்த வாரம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து சென்னையிலிருந்து நாகைக்கு கொண்டுசெல்லப்பட்ட இக்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கப்பல் தயாரான பின்பு நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு முதற்கட்டமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 16) காலை 10 மணிக்கு நாகை துறைமுகத்திலிருந்து 47 பயணிகளுடன் புறப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடையும். மறுமார்க்கமாக நாளை மறுநாள் இலங்கையிலிருந்து புறப்படும் கப்பல், நாகைக்கு வந்தடையும்.
இந்நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) முதல் நாள்தோறும் நாகப்பட்டினத்தில்(Nagapattinam) இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் சிவகங்கை கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். பின்னர் இலங்கையில்(Sri Lanka) இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில்(Nagai To Sri Lanka Ship Ticket Price) 123 சாதாரண இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் உள்ளன. நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் செல்வதற்கு ஒருவழிப் பயண எக்கானமி கட்டணம் ரூ. 4,997 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரீமியம் எக்கானமி கட்டணம் ரூ. 7,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி இந்த கட்டணத்திற்குள்ளேயே அடங்கும். நாகை - இலங்கை இடையே கப்பல் பயணம் மேற்கொள்வதற்காக www.sailindsri.com என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதில் பயணிக்கும் நபர்களுக்கு 60 கிலோ வரை லக்கேஜும், 5 கிலோ வரை கைப்பயும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி
நாகை – இலங்கை(Nagai To Sri Lanka) இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு மீண்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த மே 13ஆம் தேதி தொடங்கப்படும் என தேதி மாற்றப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக இந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு பின்பு இறுதியாக இன்று தொடங்கப்பட்டுள்ளது.