பாஜகவில் இணையப்போகும் அமமுக? டிடிவி தினகரன் வைத்த கோரிக்கைகள் என்ன?

பாஜகவில் டிடிவி தினகரனின் அமமுக இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தனது கட்சியை இணைக்கும் முன்பாக அண்ணாமலையிடம் சில நிபந்தனைகளை டிடிவி தினகரன் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jul 2, 2024 - 13:29
Jul 2, 2024 - 13:32
 0
பாஜகவில் இணையப்போகும் அமமுக? டிடிவி தினகரன் வைத்த கோரிக்கைகள் என்ன?
AMMK will Joins BJP

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்ட பிறகு கட்சியில் இருந்த மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாக புகார் எழுந்தது. பல மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. தேசிய அளவில் சிலருக்கு பதவி அளிக்கப்பட்டது. கட்சியை வளர்ப்பதாக மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்றார் அண்ணாமலை. அதன் எதிரொலியாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு 11 சதவிகித வாக்குகள் கிடைத்தன. 

தமிழ்நாட்டில் பாஜகவை நிலை நிறுத்த அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விட்டார் அண்ணாமலை. சிறிய கட்சியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அண்ணாமலை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜக உடன் இணைத்தார். நள்ளிரவு 2 மணிக்கு கட்சியை இணைக்கும் முடிவை எடுத்ததாக சரத்குமார் கூறியது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.

கட்சியை இணைத்த சரத்குமாருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. தனது மனைவி ராதிகாவை விருதுநகர் தொகுதியில் போட்டியிட வைத்து பிரச்சாரம் செய்தார் சரத்குமார். விருதுநகர் மாரியம்மனுக்கு அங்கப்பிரதட்சணம் எல்லாம் செய்தார் சரத்குமார். 

இதே போல மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் டிடிவி தினகரன். அவருக்கு தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வாக்குகளை பெற்றாலும் திமுகவின் தங்கத்தமிழ்செல்வனிடம் தோல்வியடைந்தார் டிடிவி தினகரன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்ற அண்ணாமலை ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து அப்போது பேசியதாக தெரிகிறது. 5 மணி நேரம் பேசிய நிலையில் அமமுகவை பாஜக உடன் இணைப்பது பற்றியும் அப்போது பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கட்சியை இணைக்க வேண்டும் என்றார் ராஜ்யசபா உறுப்பினர் பதவியோடு மத்திய அமைச்சரவையில் இடம் தர வேண்டும் எனவும் டிடிவி தினகரன் நிபந்தனை விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக உடன் அமமுகவை இணைப்பீர்களா என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து உண்மை நிலையை உணர்ந்து நல்ல முடிவை எடுக்கும் போது, அதுபற்றி நாங்கள் கலந்து பேசி முடிவு எடுப்போம். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம் என்று கூறியிருந்தார். 

அதிமுகவுடன் அமமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை. அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். அதிமுகவில் தவறான தலைமை உள்ள நிலையில் அங்கு இணைவது குறித்து கேட்பது தவறான கேள்வி என்று கூறினார். இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரன் தனது கட்சியை பாஜக உடன் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு சசிகலாவின் தயவால் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் டிடிவி தினகரன். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறைக்கு சென்ற பிறகு ஆட்சியையும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.   

டிடிவி தினகரன் செய்த கலாட்டாவில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் சிலர் போர்க்கொடி உயர்த்தினர். டிடிவி தினகரன் தனது வசம் சில எம்எல்ஏக்களை இழுத்தார். அவரை நம்பி 10க்கும் எம்எல்ஏக்கள் பின்னால் சென்றனர். இதனையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு இறுதியில் ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்ததை அடுத்து அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை எடப்பாடிபழனிச்சாமி வசம் சென்றது. 
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன். அடுத்தடுத்து டிடிவி தினகரனுக்கு சறுக்கல்கள் ஏற்படவே அவரது அணியில் இருந்த தங்க தமிழ் செல்வனும், செந்தில் பாலாஜியும் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் தாய் கட்சியான அதிமுகவில் இணைந்தனர். 

அமமுக படிப்படியாக கரையத் தொடங்கியது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது அமமுக. டெபாசிட் இழந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்தான் மக்களவைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன். விரைவில் தனது கட்சியான அமமுகவை பாஜகவில் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow