இனி வெயிலுக்கு ஓய்வு... தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை... குடையை ரெடியா எடுத்து வைங்க மக்களே!
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களிலும் 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தியது.
சென்னை: தமிழ்நாட்டில் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே முன் எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் கடுமையாக வாட்டியது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களிலும் 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தியது.
ஜுன் மாதம் தொடக்கம் வரை வெயில் வாட்டிய நிலையில் அதன்பிறகு வானிலை மாறியது. பல்வேறு மாவட்டங்களில் ஒரளவு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கனமழை காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல் வரும் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் சென்னை நகரில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும். நாளை நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 5ம் தேதிவரை மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?