Sanjiv Khanna: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி... சஞ்சீவ் கன்னாவை முன்மொழிந்த சந்திரசூட்!
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார். இதனையடுத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு பின்னர் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், நவ.10ம் தேதி அவர் ஓய்வு பெறுவார் என சொல்லப்படுகிறது. முன்னதாக நவம்பவர் 2022ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்றார். இதனால் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை பரிந்துரை செய்துள்ளார் சந்திரசூட். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சஞ்சீவ் கன்னாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் சந்திரசூட்.
அதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், சஞ்ஜீவ் கன்னா இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்பார். அப்படி சஞ்சீவ் கன்னா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும்பட்சத்தில், அவரது பதவிக்காலம் மே 13, 2025 வரை சுமார் 7 மாதங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. நீதிபதி சஞ்சீவ் கன்னா 2019 ஜனவரியில் டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது 65 என்ற நிலையில், தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், நவம்பர் 10ம் தேதி 65 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1960ம் ஆண்டு மே 14ம் தேதி பிறந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாக சட்ட மையத்தில் சட்டம் படித்தார். அதன்பிறகு, 1983ல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்த அவர், ஆரம்ப நாட்களில், திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பயிற்சிப் பெற்றார், பின்னர் உயர்நீதிமன்றத்தில் பயிற்சியை தொடங்கிய சஞ்சீவ் கன்னா, 2019 ஜனவரி முதல் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார். 14 ஆண்டுகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர், 2005ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 2006ல் நிரந்தர நீதிபதியானார்.
நீதிபதி சஞ்சீவ் கன்னா ஜூன் 2023 முதல் டிசம்பர் 2023 வரை உச்சநீதிமன்ற சட்டப் பணிகள் குழுவின் தலைவராக இருந்துள்ளார். தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் குழு உறுப்பினராகவும் அவர் உள்ளார். உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்காமல், நேரடியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பதில் சஞ்சீவ் கன்னாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?