டெல்லியின் அடுத்த முதல்வர் யார்?.. டாப் லிஸ்ட்டில் 5 பேர்.. இவருக்கு தான் அதிக வாய்ப்பு!

'’டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்’’ என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

Sep 16, 2024 - 11:29
 0
டெல்லியின் அடுத்த முதல்வர் யார்?.. டாப் லிஸ்ட்டில் 5 பேர்.. இவருக்கு தான் அதிக வாய்ப்பு!
Adishi Marlina

டெல்லி: டெல்லியில் முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்பு அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் , திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கெஜ்ரிவாலை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. 

சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் ஜாமீன் கேட்ட நிலையில், அதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கெஜ்ரிவாலுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், இன்னும் 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் பேசிய அவர்,’’இன்னும் 2 நாட்களில் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன். நான் நிரபராதி என மக்கள் தீர்ப்பு அளிக்கும் வரை முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை.  டெல்லியில் ஒவ்வொரு தெருக்களுக்கும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். நேர்மையானவன் என நினைத்தால் மக்கள் எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கட்டும்; அதன்பிறகு முதல்வராக பதவியேற்பேன். நான் நேர்மையானவன் இல்லை என நினைத்தால் மக்கள் எனக்கு ஓட்டுப்போட வேண்டாம். டெல்லியில் தேர்தல் நடக்கும் வரை கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக பதவியேற்பார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தி, புதிய முதல்வர் குறித்து அறிவிக்கப்படும்'' என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் புதிய முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் அமைச்சரும், மூத்த தலைவருமான அதிஷி மர்லினா முதலிடத்தில் இருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கல்வித்துறை, சுற்றுலாத் துறை, கலை, கலாச்சாரம் மற்றும் மொழி, பொதுப்பணித்துறை ஆகிய 5 துறைகளை கையில் வைத்திருக்கும் அதிஷி மர்லினா, ஆம் ஆத்மியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறகு தெரிந்த முகமாக பார்க்கப்படுகிறார். 

ஆம் ஆத்மி தொடங்கியது முதல் கட்சியின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர் அதிஷி. டெல்லியில் ஆம் ஆத்மி முதன்முறையாக ஆட்சிக்கு வர காரணமாக அமைந்த தேர்தல் அறிக்கையை தயார் செய்ததில் முக்கிய உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் டெல்லி அரசின் கல்வி நிலைக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் புரட்சிகர கொள்கைகளுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கும் அதிஷி, பாஜகவை பாரபட்சமின்றி விமர்சிப்பதில் பெயர் பெற்றவர். அண்டை மாநில பாஜக அரசுகள் டெல்லிக்கு தண்ணீர் வழங்காததை கண்டித்து அண்மையில் அதிஷி பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

அதிஷி தவிர முதல்வர் பட்டியலில் அமைச்சர்களும், மூத்த தலைவர்களுமான கைலாஷ் கலோட், சௌரப் பரத்வாஜ், கோபால் ராய் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகிய 4 பேரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow