10 சதவீதம் வட்டி.. 18,000 பேரிடம் ஆசை காட்டி ரூ.700 கோடி அளவுக்கு மோசடி..

8 முதல் 10 சதவீத வட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனத்திடம் இருந்து தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Sep 16, 2024 - 11:20
Sep 16, 2024 - 11:34
 0
10 சதவீதம் வட்டி.. 18,000 பேரிடம் ஆசை காட்டி ரூ.700 கோடி அளவுக்கு மோசடி..
18,000 பேரிடம் ரூ.700 கோடி அளவுக்கு மோசடி

ஏறக்குறைய 18,000 பேரிடம் ஆசை காட்டி கவர்ந்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த சையத் அசாப் ராஹுல், முகமது இக்பால் உள்ளிட்ட குழுவினர், மாதாப்பூர் பகுதியில் டி.கே.இசட் சொல்யூசன்ஸ் [DKZ Technologies] என்னும் பெயரில் முதலீட்டு நிறுவனத்தை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறார்கள்.

தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் 8 முதல் 10 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று ஆசை காட்டியதோடு அது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். இதை நம்பி ஹைதராபாத்தில் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 18,000 பேர், அந்த நிறுவனத்தில் 5000  ரூபாய் முதல் துவங்கி லட்சக்கணக்கான ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

இப்படி 700 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை முதலீட்டாளர்கள் அனைவருக்கும் மாதம், மாதம் வங்கி கணக்கு மூலம் எட்டு முதல் பத்து சதவீதம் வரை லாபம் வழங்கப்பட்டது. ஆனால், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லாபம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

ஏன் என்று கேட்ட முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனத்தை வங்கி அல்லாத நிதி மேலாண்மை நிறுவனமாக மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. எனவே, சிறிய அளவிலான தொகைகளை வங்கிக் கணக்கில் செலுத்த இயலாது. சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதனை உண்மை என்று நம்பிய முதலீட்டாளர்கள் அமைதி காத்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி டி.கே இசட் சொல்யூஷன் நிறுவனத்தின் ஷட்டர் மூடப்பட்டது. அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள், ஊழியர்கள் என யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

அப்போதுதான் தங்களின் முதலீட்டு பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்த முதலீட்டாளர்கள், மாதாபூர் காவல் நிலையத்திலும் ஹைதராபாத் குற்ற தடுப்பு பிரிவு காவல் ஆணையத்திலும் புகார் அளித்தனர். இதன்பேரில் டி.கே.இஸட் சொல்யூஷன் இயக்குனர்களான சையத் அசாப் ரஹீல், முகமது இக்பால் மற்றும் ஊழியர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, ஊழியர்கள் தலைமறைவாகினர். இதனையடுத்து, தலைமறைவானவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் விரைவாக அவர்களைக் கைது செய்து, தங்கள் முதலீட்டை மீட்டுத்தரும்படி மாதாபூர் காவல் நிலையம் எதிரில் முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow