பீகார் முதல்வர் கஞ்சா அடிமை.. எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி விளாசல்
முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார் என்றும் அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவி குற்றம்சாட்டினார்.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய கூட்டணி கட்சிகளுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், பீகார் சட்ட மேலவையில் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் , எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது, ராப்ரி தேவி எழுப்பிய கேள்விக்கு அரசுத் தரப்பு அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் நிதீஷ் குமார், “முந்தைய அரசுகள் செய்ததை விட தற்போது உள்ள அரசு அதிகமாகவே செய்து வருகிறது” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட ராப்ரி தேவி, “எங்கள் ஆட்சி கால சாதனையை படித்து பார்த்தால் உங்களால் பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும் " என்றார்.
மேலும், "உங்கள் ஆட்சி காலத்துக்கு முன்பு பீகாரில் பெண்கள் உடை கூட அணிந்தது இல்லை என்பது தானே உங்கள் கருத்து’ என்று முன்பு நிதீஷ் குமார், பெண்கள் குறித்து விமர்சித்ததை சுட்டிக் காட்டி இவ்வாறு கூறினார்.
இதற்கு பதிலளித்த நிதீஷ் குமார், “முன்பு எப்போதும் இல்லாத வகையில் எங்கள் ஆட்சியில் பெண்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. ஆண்களும், பெண்களும் தற்போது அச்சமின்றி வெளியில் சென்று வருகிறார்கள். உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு என்ன செய்தீர்கள்? உங்கள் கணவர் லாலு கூட சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டதால் தான் மனைவியான உங்களை முதல்வராக்கினார்” என்று கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ராப்ரி தேவி தலைமையில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் ராப்ரி தேவி பேசியதாவது, “முதல்வர் நிதீஷ் குமார் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார். அவையில் பெண்களை அவதூறாக பேசி வருகிறார். பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நாங்கள் என்ன செய்தோம் என்று பீகார் மக்களுக்கு தெரியும்” என்று கூறினார்.
What's Your Reaction?






