மகிளா சம்ரிதி யோஜனா: பெண்களுக்கு மாதம் ரூ.2500- வெளியானது சூப்பர் அப்டேட்!
டெல்லியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டமாகும். இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத் தொகை திட்டம் உரிய காலத்தில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக பல்வேறு கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தி, முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இறுதியாக தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000- த்தினை பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கி தற்போது வரை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தினைப் பார்த்து மற்ற மாநிலங்களும் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கான உரிமைத் தொகையினை அறிவிக்கத் தொடங்கியது. கர்நாடகா, மகாராஷ்டிராவினைத் தொடர்ந்து டெல்லித் தேர்தலிலும் இந்த வாக்குறுதி வாக்காளர்கள் மத்தியில் ஹிட் அடித்தது. சமீபத்தில் நடைப்பெற்று முடிந்த டெல்லி தேர்தலில் பாஜக அமோக வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. டெல்லி பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமானதாக கருதப்பட்டது மகளிருக்கு ரூ.2500 உதவித்தொகை வழங்கும் “மகிளா சம்ரிதி யோஜனா திட்டம்”. இத்திட்டம் எப்போது தொடங்கும் என எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியதோடு, தொடர் போராட்டங்களையும் சில நாட்களுக்கு முன்பு நடத்தி வந்தது.
மகிளா சம்ரிதி யோஜனா: ரூ.5,100 கோடி ஒதுக்கீடு
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு இன்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் “மகிளா சம்ரிதி யோஜனா” திட்டத்திற்கான வழிமுறை வகுக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் எனவும், இத்திட்டத்திற்காக ரூ.5,100 கோடியினை ஒதுக்கியுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
நிகழ்வினைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரேகா குப்தா தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு: “மகளிர் தினத்தன்று பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையினை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். மகளிர் தினத்தன்று டெல்லியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நமது அரசு மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு ₹5100 கோடியை ஒதுக்கியுள்ளது. விரைவில் ஒவ்வொரு தகுதியுள்ள பெண்ணிற்கும் மாதம் ₹2500 வழங்கப்படும், இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற முடியும்.
இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல, பிரதமர் மோடிஜியின் உத்தரவாதத்தை நனவாக்குவதற்கான உறுதிமொழியாகும். எங்கள் உறுதிமொழியின் வாயிலாக ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் பெறுவார்கள், ஒவ்வொரு குடும்பமும் வளமாகும்” எனத் தெரிவித்தார்.
மகிளா சம்ரிதி யோஜனா: யாரெல்லாம் தகுதி?
இத்திட்டத்திற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசின் சார்பில் இன்னும் வெளியிடப்படாத நிலையில், டெல்லியில் வசிக்கும் 18-60 வயதுக்குட்பட்ட பெண்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் மற்றும் வரி செலுத்தாதவர்கள் இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பிற அரசு திட்டங்களிலிருந்து நிதி உதவி பெறுவோர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது எனவும் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக டெல்லி அரசு பிரத்யேகமாக ஒரு ஆன்லைன் போர்ட்டலை உருவாக்கி வருகிறது. இந்த இணையதளத்தின் வாயிலாக திட்டத்தில் இணைய விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யப்படும் பயனாளர்களின் படிவங்கள் குறித்த தகவல்களைச் சரிபார்க்கவும், திட்டத்திற்குத் தகுதியானவர்களை அடையாளம் காணவும், ஐடி துறை பதிவு போர்ட்டலுடன் ஒரு தனி மென்பொருளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், ரேஷன் கார்டு, முகவரி சான்று, வங்கிப் புத்தகம் போன்ற ஆவணங்கள் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜேஎல்என் ஸ்டேடியத்தில் நடைபெற்ற மகிளா திவாஸ் நிகழ்ச்சியில், பாஜக டெல்லி தலைவர் வீரேந்திர சச்தேவா, வானதி சீனிவாசன் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!
Kudumbasthan OTT: நமது வீட்டை படம் பிடித்து காட்டிய குடும்பஸ்தன் 5 மொழிகளில் வெளியீடு!
What's Your Reaction?






