காசு தந்தா போஸ்ட்.. தவெக நிர்வாகி ஆடியோவால் பரபரப்பு.. ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழக கட்சி பொறுப்பிற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகி பிரகாஷம் என்கின்ற குட்டி பணம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்டம் ஒன்றிய அளவில் பொறுப்புகள் அளிப்பதற்கு மாவட்ட நிர்வாகி பிரகாசம் என்கின்ற குட்டி பணம் பெற்றும் மீதித் தொகையை யார் கணக்கிற்கு அனுப்புவது என குட்டியுடன் இருக்கும் நவீன் குமாரிடம் சஞ்சய் பேசும் ஆடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு நிர்வாகிகளை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார். கட்சி பொறுப்புகளில் நிர்வாகிகளை நியமிப்பதற்கு யாரிடமும் பணம் பெறக்கூடாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பிரகாசம் என்கின்ற குட்டி, மாவட்ட இணைச் செயலாளர் பதவிக்கு 5 லட்சம் ரூபாயும், மாவட்ட பொருளாளர் பதவிக்கு 3 லட்சம் ரூபாயும், மாவட்ட துணைச் செயலாளர் பதவிக்கு 2 லட்சம் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 80 ஆயிரம் ரூபாய் என அவருடன் இருக்கும் நவீன் குமார் என்பவரை வைத்து வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிக்கு செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்க 80 ஆயிரம் ரூபாய் பேசி அதில் ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை இன்று எப்படி வழங்குவது என்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
மேலும், சஞ்சய் என்பவர் பணத்தை குட்டி அண்ணனுக்கு அனுப்பி விடவா அல்லது உங்களுக்கே அனுப்பி விடவா என்று நவீன் குமார் என்பவரிடம் கேட்கிறார். அதற்கு சிறிது நேரம் பொறுங்கள் குட்டி அண்ணனிடம் கேட்டு சொல்கிறேன் என்று நவீன் கூறுகிறார். அதற்கு, சஞ்சய் நாளை பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் குட்டி அண்ணனிடம் சொல்லுங்கள் பொறுப்பு இல்லையென்றால் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது வீணாகிவிடும் என்று கூறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சிக்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகி பிரகாஷம் என்கின்ற குட்டி தன்னுடன் இருக்கும் நவீன்குமார் என்ற நபரை வைத்து லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
அதேபோன்று திருவள்ளூர் பகுதியில் வினோத் என்ற நிர்வாகி பணம் கேட்டு தர மறுத்ததால் குட்டி அவரை மிரட்டியதாக அவருடைய அம்மா மகளிர் அணியினருக்கு போன் செய்து மாவட்ட நிர்வாகி குட்டியை திட்டும் ஆடியோவும் வைரலாகி திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை பொறுப்பாளர்களை அறிவிக்க உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிப்பதில் சற்று கவனம் கொண்டு செயல்பட வேண்டுமென தலைமைக்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக தொண்டர்கள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பணம் பெற்றுக் கொண்டு பொறுப்புகள் வழங்கும் பிரகாசம் என்ற குட்டி மீது தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?






