சென்னை: சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்கும் விஜய், தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒருபக்கம் தளபதி 69 ஷூட்டிங், இன்னொரு பக்கம் மாநாடு என பரபரப்பாக இருக்கும் விஜய், கட்சி நிர்வாகிகளுக்கும் அடுத்தடுத்து அசைன்மென்ட் கொடுத்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெக மாநாட்டு நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை அனுமதியுடன், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதேநேரம், கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை அச்சுறுத்தலை கடந்து, தவெக மாநாடு எப்படி நடக்கப் போகிறது என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், மாநாடு நடைபெறும் தேதியில் மழை பெய்தால் என்ன முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன போன்ற கேள்விகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை முன்வைத்துள்ளது. இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான, மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தவெக மாநாட்டுக்கான தொகுதி பொறுப்பாளர்கள், மாநாட்டுச் சிறப்புக் குழுக்கள், புதுவை மாநில சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோரை அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களுக்கு அரசியல் பயிலரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தல்படி. நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம், மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்க உள்ளனர். அதன்படி, இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை, கொள்கைகள்-கருத்தியலை அணுகும் முறை, சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது, நான்காவதாக, வெற்றிக் கொள்கைத் திருவிழா விளக்கவுரை, இறுதியாக மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள். ஒருங்கிணைப்பாளர்கள், தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான, மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் மற்றும் கலந்துரையாடல்.#தமிழக_வெற்றிக்_கழகம்#தவெக_மாநாடு#TVKVijay… pic.twitter.com/f0oGQY3V0k
— TVK Party Updates (@TVKHQUpdates) October 17, 2024