விஜய் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளி..? போட்டுடைத்த அண்ணாமலை! த.வெ.க.-வுக்கு புதிய சிக்கல்?
தவெக தலைவர் விஜய் பரந்தூரில் ஒரு சிபிஎஸ்இ பள்ளியை நடத்திவருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். கையில் பேப்பரை காட்டி, அண்ணாமலை புட்டு புட்டு வைத்த தகவல் என்ன? விஜய் நடத்துவதாக கூறப்படும் பள்ளியின் முழு பின்னணி என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில் ..

தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் எரிமலையாய் குமுறி வருகிறது. அந்த வகையில் இதற்கு தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன என்று மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பினார். மேலும், மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே என்று சாடிய விஜய், ”பாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் என்றும் எக்ஸ் தள பதிவில் கூறியிருந்தார்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் ஒரணியில் நிற்க, தமிழக பாஜக மட்டும் எதிரணியில் நின்று களமாடி வருகிறது. இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது, “தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகம். தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு போன்ற மொழிகள் விருப்ப பாடமாக உள்ளது. தற்போது மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கின்றனர்”, என பேசி வந்த அண்ணாமலை திடீரென ஒரு பேப்பரை காட்டி சில விஷயங்களை பேசினார்.
அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ‘விஜய் வித்யாஷ்ரம்’ என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளியை நடத்திவருவதாக தெரிவித்தார். மேலும், விஜய்யின் தந்தை சந்திரசேகர் நடத்தும் அறக்கட்டளைக்கு சுமார் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை 35 வருடங்களுக்கு லீசுக்கு கொடுத்து, அதில் சிபிஎஸ்இ பள்ளியை விஜய் நடத்திவருவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் நடத்தும் பள்ளியில் மட்டும் மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் விஜய், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கலாமா என கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர்களிடம் அண்ணாமலை காட்டிய ஆவணங்களை பார்த்ததில், 2017ம் ஆண்டில் இருந்து பரந்தூர் பகுதியில் இந்த விஜய் வித்யாஷ்ரமம் பள்ளி செயல்பட்டு வருவதும் இந்த பள்ளியை நடத்த வித்யா Charitable Trustக்கு 2052ம் ஆண்டு வரை நிலத்தை ’சி.ஜோசப் விஜய்’ லீசுக்கு கொடுத்த தகவல்களும் இடம்பெற்றுள்ளது. மேலும், PRE KG படிக்கும் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 45,000 ரூபாய் கட்டணமாகவும், 7ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 60,000 ரூபாய் வரை கட்டணமாகவும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் பெறப்படுவதையும் தெரிந்துக்கொள்ள முடிந்தது.
இந்நிலையில், அரசியல்வாதியான விஜய் பொதுவெளியில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்துவிட்டு, தற்போது மும்மொழி கொள்கையை பின்பற்றும் சிபிஎஸ்இ பள்ளிக்கு நிலம் வழங்கியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்க போன விஜய், த.வெ.க-வுக்கு புதிய பிரச்சனையை வாண்டடாக இழுத்துக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?






