பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை..!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2 நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு மற்றும்  அதனை தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Dec 9, 2024 - 11:38
 0
பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை..!
பரபரப்பான அரசியல் சூழலில் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை..!

தமிழக சட்டப்பேரவையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவித்தார். கடந்த 2-ம் தேதி நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டம் (இன்று) டிசம்பர் 9 ,10 ஆகிய  2 நாட்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார். அதன்பின், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், இரா. சம்பந்தன். இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்,  புத்ததேவ் பட்டாச்சார்ஜீ. மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைவு, ஜெனரல் எஸ். பத்மநாபன். இராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மறைவு,  சீதாராம் யெச்சூரி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மறைவு, எஸ்றா சற்குணம், ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் மற்றும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் மறைவு, ரத்தன் டாடா. பிரபல தொழிலதிபர் மறைவு, பி. சங்கர். தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் மறைவு, முரசொலி செல்வம், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் ஆகியோர் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அரசின் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் மாநில அரசின் அனுமதி பெறாமல் மத்திய அரசால் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். இந்த தீர்மானத்தின்மீது சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் பேசிய பிறகு, தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow