தவெக தொடக்க விழா.. பேச்சும் இல்லை, எழுச்சியும் இல்லை.. விஜய் தயங்குவது ஏன்?
தமிழக வெற்றிக் கழக தொடக்க விழாவில் விஜய் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பேசுவதை தவிர்த்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கினார். அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு காலத்தில் கட்சியின் மாநாட்டிலும் அதனைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு களத்தில் போராடிவரும் மக்களை சந்தித்தபோது மட்டுமே விஜய் உரையாற்றி இருக்கின்றார்.
அந்த வகையில் மாநாட்டில் முக்கால் மணி நேரமும், பரந்தூர் மக்களை சந்தித்தபோது 11 நிமிடங்கள் என மொத்தம் ஒரு மணி நேரம் மட்டுமே கட்சி தொடங்கிய ஓராண்டு காலத்தில் விஜய் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி பெரும்பாலான நேரங்களில் மக்கள் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாகவும், ஆளும் கட்சி மீதான விமர்சனத்தையும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவாகவும், சில நேரங்களில் அறிக்கை வாயிலாக மட்டுமே தெரிவித்து வருகின்றார். ஊடக சந்திப்புகளையும் விஜய் இதுவரை நடத்தியது இல்லை.
பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்டு முதல் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கக்கூடிய நிகழ்ச்சியும், கொள்கை தலைவர்கள் சிலை திறப்பு நிகழ்ச்சி மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வும் மிக எளிமையாக நடைபெற்று முடிந்தது. கட்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டு நிறைவையொட்டி விஜய் நிர்வாகிகள் மத்தியில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பெரும்பாலான கட்சி நிர்வாகிகளும் ஊடகத்தினரும் கூட விஜய்யின் உரை இருக்கும் என்று எதிர்பார்த்தே பனையூர் கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்தனர். ஆனால் அவர் உரையாற்றுவதை தவிர்த்து விட்டார். அரசியலின் அடிப்படையே பேச்சின் வழியே கருத்துக்களையும், கொள்கைகளையும், விமர்சனங்களையும் எடுத்து வைப்பது என்றிருக்கும் போது விஜய் மிக முக்கியமான சந்தர்ப்பங்களில் கூட பேசுவதை தவிர்த்து வருவது ஏன் என்கின்ற கேள்வியை பலர் முன்னிறுத்தி உள்ளனர்.
இது குறித்து தமிழக வெற்றி கழக வட்டாரங்களில் விசாரித்த போது 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி நடைபெறும் பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது பேசிக் கொள்ளலாம் என்ற முடிவில் விஜய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இடைப்பட்ட காலத்தில் எதுவும் பேசுவதில்லை என்ற முடிவில் அவர் இருப்பதாகவும், வீண் விமர்சனங்களையும், விவாதங்களையும் தவிர்க்க விரும்புவதாக தமிழக வெற்றி கழகத்தினர் கூறியுள்ளனர்.
விஜய் இத்தகைய முடிவில் இருந்தார் என்றால் கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்துவதில் இருந்து தவறுவதாகவே விஜயின் முடிவு அமையும் என்கின்ற பார்வையும் முன் வைக்கப்படுகிறது. பேசாமல் இருப்பது தான் பலம் என்று விஜய் நினைத்தார் என்றால் அரசியலில் இறங்கி இருக்கும் அவர் முக்கிய சந்தர்ப்பங்களில் பேசாமல் இருப்பது பலவீனம் என்பதையும் அவர் உணர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் "விஜய்யின் பேச்சும் இல்லை தொண்டர்களிடையே எழுச்சியும் இல்லை" என்ற அளவில் முடிந்து போனதே எதார்த்தம்.
What's Your Reaction?