காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கிறது.. வானிலை மையம் கொடுத்த தகவல்
சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளான தான்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
அதேபோல், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளான காட்டுமன்னார்கோயில், புவனகிரி, முட்லூர், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில், சிதம்பரத்தில் தாழ்வான பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் மழைநீர் அதிக அளவு தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதிகளை கடந்து, நாளை அதிகாலை சென்னைக்கு அருகே புதுச்சேரி - நெல்லூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, தரைக்காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப்பகுதிகளில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
What's Your Reaction?






