ஈட்டியாக பாயும் ஈரோடு பாலிடிக்ஸ்..? இரிட்டேட் செய்த தோப்பு..! வெடித்த முத்துச்சாமி..!

ஈரோடு திமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பிரஸ் மீட்டிலேயே தோப்பு வெங்கடாசலம் மீது அமைச்சர் முத்துச்சாமி, எரிச்சலைக் கொட்டியது பேசு பொருளாக மாறியுள்ளது. ஈரோடு திமுகவில் நடப்பது? அமைச்சரின் மனநிலை என்ன? தோப்பு வெங்கடாசலம் இதனை எப்படி சமாளிக்கப் போகிறார்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

Feb 19, 2025 - 17:04
Feb 19, 2025 - 17:23
 0
ஈட்டியாக பாயும் ஈரோடு பாலிடிக்ஸ்..? இரிட்டேட் செய்த தோப்பு..! வெடித்த முத்துச்சாமி..!
ஈட்டியாக பாயும் ஈரோடு பாலிடிக்ஸ்..? இரிட்டேட் செய்த தோப்பு..! வெடித்த முத்துச்சாமி..!

இப்படி, பிரஸ் மீட்டிலேயே புதிதாக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தோப்பு வெங்கடாசலம் மீது அமைச்சர் முத்துச்சாமி கோபமாகியுள்ளது, ஈரோடு பாலிடிக்ஸை ஈ லோகம்  அறிந்துக் கொள்ளும் அளவிற்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து ஈரோடு திமுக பல்ஸ் அறிந்தவர்களிடம் பேசினோம். 

அதிமுக காலத்தில்  வருவாய்த்துறை அமைச்சராகவும், சுற்றுச்சுழல்துறை அமைச்சராகவும்  இருந்தவர் பெருந்துறையைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம். தொடர்ந்து 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் திமுகவினருக்கு பல்வேறு அழுத்தங்களை தோப்பு வெங்கடாசலம் கொடுத்ததாக உடன்பிறப்புகள் சிலர் இன்றளவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் தோப்பு வெங்கடாசலத்திற்கு எவ்வித பொறுப்புகளும், அமைச்சர் பதவியும் வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மீண்டும் சீட் பெற பல்வேறு வழிமுறைகளை தோப்பு வெங்கடாசலம் கையாண்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக பெருந்துறையில் உள்ள ஒரு வீதிக்கு  எடப்பாடி நகர் என பெயர் வைத்தும், பல்வேறு திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி பெயரில் வழங்கிய நிலையிலும், 2021ம்  ஆண்டு தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு மீண்டும்  போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இதனையடுத்து தோப்பு வெங்கடாச்சலம் டிடிவி அணிக்கு தாவுவதாகக் கூறப்பட்ட நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார். இந்த தோல்விக்கு பிறகு திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலத்திற்கு 3 ஆண்டுகள் எவ்வித பதவிகளும் வழங்கப்படாமலே  இருந்து வந்தது. 

அண்மையில் கட்சியின் உட்கட்டமைப்பை மேலும் வலுபடுத்துவதற்காக திமுக சில அதிரடி மாற்றங்களை செய்திருந்தது. அதில் ஈரோடு திமுகவின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களை பிரித்து, ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே பயணித்துள்ள தோப்பு வெங்கடாசலத்திற்கு, பதவி கொடுத்திருப்பது, ஏற்கெனே பல ஆண்டுகளாக கழக பணியாற்றி வந்த திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

அதோடு, தோப்பு வெங்கடாசலம் அமைச்சராக இருக்கும் காலத்தில் திமுக நிர்வாகிகளுக்கு  எதிராக பல வேலைகள் செய்ததாகவும் , தற்போது அவரின் தலைமையின் கீழ் கழக பணி செய்ய வேண்டி உள்ளதாகவும் திமுக நிர்வாகிகள் குமுறி வருகின்றனர். 

மேலும், அதிமுகவில் இருந்த போது, அக்கட்சியை வளர்க்காமல் தனக்கென தனி கோஷ்டியை உருவாக்கிக் கொண்டிருந்தவருக்கு திமுகவில் பொறுப்பு வழங்குவதா? இது திமுகவின் வளர்ச்சி எந்த விதத்திலும் உதவி செய்யாது? என தோப்பு வெங்கடாசலம் குறித்து கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருந்த  ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி தனது ஆதங்கத்தை தலைமையிடமும், அமைச்சர் முத்துச்சாமியிடமும் வெளிப்படுத்தியதாக ஈரோடு திமுக தரப்பினர் கூறுகின்றனர். அதோடு, தன்னுடைய ஒன்றிய செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கட்சியின் தலைமைக்கும் , அமைச்சர்  முத்துசாமிக்கும் கே.பி.சாமி கடிதம் அனுப்பியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இது தலைமையின் காதிற்கு சென்றதால்,  ஒன்றிய செயலாளர் கே.பி சாமியை தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து அமைச்சர் முத்துச்சாமி சுமார் 3 மணி நேரம் சமாதான பேச்சு நடத்தியதாகவும், எனினும் கே.பி.சாமி தன்னுடைய முடிவிலிருந்து மாறாததால், திமுகவினர் இடையே கடும் அதிர்ச்சி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.  

இப்படி ஈரோடு திமுக உடன்பிறப்புகள் தோப்பு நியமனம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், அமைச்சர் முத்துச்சாமிக்கு இது ஈகோ கிளாஷாகவே மாறிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதாவது, அமைச்சர் முத்துச்சாமியிடம் இருந்த அதிகாரத்தை பங்கிட்டு தான் தோப்பு வெங்கடாசலத்திற்கு தலைமை கொடுத்துள்ளது. இதனால் செம்ம அப்செட்டில் முத்துச்சாமி இருப்பதாகவும், அதேபோல தன்னை போலவே அதிமுகவில் இருந்து வந்த தோப்புவுக்கு தலைமை முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கிவிட்டதால் தன்னுடைய மவுசு குறைந்துவிடுமோ என்ற அச்சம் அமைச்சருக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள, தனது அதிருப்தியில் மனதிலேயே வைத்துக் கொண்டு தலைமை சொல்வதை செய்து வருகிறார் முத்துச்சாமி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

இத்தகைய சூழலில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு, ஈரோடு திமுக மத்திய மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாசலம் , வீட்டுவசதி துறை அமைச்சர்  முத்துசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பெரியார், கலைஞர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு திமுக மத்திய மாவட்ட செயலாளராக தோப்பு வெங்கடாசலம் நியமனத்தில் பெருந்துறை திமுகவினருக்கு அதிருப்தி இருப்பது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அப்போது குறுக்கிட்டு பதிலளித்து பேசிய தோப்பு வெங்கடாசலம் "அது வேண்டாம் என்றும், இது உள்கட்சி பிரச்னை. இது நல்ல நேரம், அது வேண்டாம்” என்றார். மேலும், அதிருப்தி என்பது இல்லை என பதிலளித்த தோப்பு வெங்கடாசலத்தை “இருங்கள் நான் பேசிக்கிறேன். பத்திரிகையாளர்கள் என்னிடம் தான் கேட்கிறார்கள். நான் பதிலளித்துக் கொள்கிறேன். ஏன்  குறுக்கிடுகிறீர்கள்?” என அமைச்சர் முத்துசாமி எரிந்து விழுந்தார்...... 

தொடர்ந்து கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, ”ஒவ்வொரு பொறுப்பும் வழங்கும்போது வேறு சிலர் இருக்கலாம் என்ற எண்ணம் இருக்கும் அதெல்லாம் நான்கு நாட்களுக்கு இருக்கும். இதனை பெரிதாக்குவது சரியானதாக இருக்காது. திமுக கட்டுப்பாடான கட்சி. தலைமை சொல்வதுதான் எங்களின் முடிவு. தலைமையின் முடிவில் மாறுபட்ட கருத்துகள் இருந்தால் அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். தற்போது அவர்கள் பேசி முடித்துவிட்டனர்” என்று ஈரோடு திமுகவில் சலசலப்பு இருப்பதை அமைச்சர் முத்துச்சாமி உறுதிப்படுத்தினார். 

பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துச்சாமி, உட்கட்சி பிரச்னை இருப்பது உண்மைத்தான் என்றும், இதுகுறித்து தலைமையிடம் தான் கேட்கவேண்டும், தலைமை சொல்வதை மட்டும்தான் தான் செய்வதாக அமைச்சர் முத்துச்சாமி கூறியது அவரது கோபத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இப்படி, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, அமைச்சரின் அதிருப்தி என ஈரோடு திமுகவில் பிரச்னைகள் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. இதில் திமுக தலைமை தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow