நள்ளிரவில் கேட்ட "டமார்.." சத்தம்... ஓடிவந்த ஊர் மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ரத்தம் சொட்ட.. துடிதுடித்து இறந்த நபர்!
திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோட்டில் பாலத்தை உடைத்து கொண்டு டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் டேங்கர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருடன் கிரண் என்பவர் கிளீனர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூருவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் சென்று இறக்கிவிட்டு மீண்டும் பெங்களூரு நோக்கி நேற்று (நவ. 28) திரும்பியுள்ளார். திண்டுக்கல் பழனி பைபாஸ் ரோட்டில் உள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரியின் முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு இரண்டு பாலங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் தொங்கியபடி கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. இதில் லாரி ஓட்டி வந்த சந்திரசேகர் மற்றும் உடன் வந்த கிளீனர் கிரண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன், தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், திண்டுக்கல் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்துக்குள்ளான லாரி நட்ட நடு ரோட்டில் விழுந்து கிடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து பின்பு லாரியை மீட்டனர். மேலும் திண்டுக்கல் துணை தீயணைப்பு துறை நிலை அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த பாலத்தின் வழியாக பழனி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு பேருந்துகள் வந்து செல்வது வழக்கமாகும். நல்ல வேலையாக இந்த லாரி கவிழ்ந்த நேரத்தில் எந்த ஒரு வாகனமும் இந்த பாலத்தை கடக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ நேரத்தில் தமிழ்நாடு அரசு பேருந்தின் திண்டுக்கல் யூனிட்டுக்கு சென்ற பேருந்து நூலிலையில் பெரும் விபத்திலிருந்து தப்பியதாகவும் கூறினர். இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த டிரைவர் சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தாகவும் கிளீனர் கிரண் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
What's Your Reaction?