வீட்டில் தனியாக இருந்த பெண்களுக்கு அரிவாள் வெட்டு... காஞ்சிபுரத்தை உலுக்கிய சம்பவம்!
காஞ்சிபுரத்தில் 18 வயது இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை மர்ம கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் காலணி பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். விவசாயம் தொழில் செய்து வரும் இவருக்கு கௌதம், பிரேம்குமார், தேவதர்ஷினி என்கிற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இவரது இரண்டாவது மகனான பிரேம் குமார், கடந்த ஜூன் மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட உதயநிதி என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளிவிந்து போலீசாரின் அறிவுறுத்தலின் பெயரில் வெளியூர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் கோவிந்தவாடி அகரம் கிராமத்திலேயே வசித்து வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று (நவ. 28) மாலை 7 மணியளவில் அதித போதையில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென இவர்களது வீட்டுக்குள் புகுந்து, சிவகாமி மற்றும் அவரது மகள் தேவதர்ஷினி ஆகிய இருவரையும் கொலை செய்யும் நோக்குடன் கழுத்தில் வெட்ட வந்துள்ளனர். அதனை தடுத்த இருவருக்கும் கைகளில் சரமாரியாக வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து இவர்களது கூச்சலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களைக் காப்பாற்றுவதற்காக வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை சுதாரித்து கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனையெடுத்து படுகாயங்களுடன் இருந்த சிவகாமி மற்றும் தேவதர்ஷினி ஆகிய இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் ஆர் எஸ் தலைமை மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அறிந்த பாலுச்செட்டி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விவரங்கள் குறித்து கேட்டறிந்து மர்ம நபர்கள் யார்? உதயநிதி கொலைக்கு பழிக்கு பழியாக இவ்வெறி செயலில் ஈடுபட்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க பாலுச்செட்டி சத்திரம் காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் தனிப்படை போலீசார் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அவ்வப்போது கொலை சம்பவங்களும், கொலைவெறி தாக்குதல்களும் அரங்கேறி வரும் நிலையில் அப்பகுதியில் இரவு நேரத்தில் நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?