சர்வதேச அரசியல் படிக்க லண்டன் செல்லும் அண்ணாமலை.. பாஜகவின் புதிய மாநிலத்தலைவர் யார்?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் லண்டனில் படிக்க செல்ல இருப்பதால் தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவரை நியமிக்க தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கமலாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jul 1, 2024 - 15:02
Jul 2, 2024 - 12:14
 0
சர்வதேச அரசியல் படிக்க லண்டன் செல்லும் அண்ணாமலை.. பாஜகவின் புதிய மாநிலத்தலைவர் யார்?
BJP Leader Annamalai Go to London For Study International Politics

ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த 2020ம் ஆண்டு பணியை விட்டுவிட்டு அரசியலில் குதித்தார். தற்போது அதில் தனக்கான இடத்தையும் பிடித்து பலரது செல்வாக்கையும் பெற்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு தமிழக பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, எல்.முருகன் மத்திய இணையமைச்சர் ஆனதும், தமிழக பாஜக தலைவர் பொறுப்புக்கு வந்தார்.2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினாலும், கட்சியின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு அண்ணாமலை தோல்வியைத் தழுவினார். 

தமிழக பாஜகவில் தலைமை குறித்து விமர்சித்த சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்தநிலையில்தான் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் செவனிங் உதவித் தொகை மூலம் சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பைப் பயில அண்ணாமலை மூன்று மாதங்கள் இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரின் இந்தப் படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.அங்கு தங்கிப் படிப்பதற்கான செலவை பல்கலைகழகமே ஏற்றுள்ளது. இதற்கான விசா நடைமுறைக்காக அண்ணாமலை தற்போது பெங்களூரு சென்றுள்ளார்.இந்தப் படிப்பிற்காக அவர் மூன்று மாதக் காலம் வெளிநாட்டுக்கு சென்றால், யார் பாஜக மாநில பொறுப்பை ஏற்றுக்கொண்டு வழிநடத்துவார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு பாஜகவிற்கு வளர்ச்சியை ஏற்படுத்திக்கொடுத்தவர் அண்ணாமலை. மக்களவைத் தேர்தலில் தனி கூட்டணி அமைத்து குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வாக்குகளை பெற்று கொடுத்தவர் அண்ணாமலை.  பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் அண்ணாமலை மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகவே  அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்ட போதும் அண்ணாமலை மீது தேசிய தலைமை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதே போல தமிழகத்தில் 40 இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்த போதும் தேசிய தலைமை அண்ணாமலைக்கு உறுதுணையாக இருந்தது. 

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை குறிக்கோளாக வைத்து அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில், திடீரென அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு  அண்ணாமலை லண்டனில் படிக்க செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக பாஜகவில் மாநில தலைவர் பொறுப்புக்கு புதிதாக ஒருவரை  தற்காலிகமா நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த பாஜக மாநில தலைவராக யாரை நியமிக்கலாம் என தேசிய தலைமை ஆலோசனையை தொடங்கியுள்ளது. தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவரை தமிழக பாஜகவின் புதிய தலைவராகவோ அல்லது பொறுப்பு தலைவராகவோ நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow