தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி.. வாராஹி அம்மனுக்கு இனிப்புகளால் அலங்காரம்

தஞ்சாவூர்: தஞ்சை பெரியக் கோயிலில் ஆஷாட நவராத்திரி பெருவிழா தொடங்கியது பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாளான இன்று வாராகி அம்மனுக்கு ஜாங்கிரி, மைசூர்பாகு, லட்டு சந்திரகலா. உள்ளிட்ட பல வகையான இனிப்புகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

Jul 5, 2024 - 17:15
 0
தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி.. வாராஹி அம்மனுக்கு இனிப்புகளால் அலங்காரம்
Thanjavur big temple ashada navarathirai

ஆனி மாதத்தில் வரும் ஆஷாட நவராத்திரியை வாராஹி வழிபாட்டிற்குரிய விழாவாக தென் மாநிலங்களிலும், துர்க்கை வழிபாட்டிற்குரிய விழாவாக வட மாநிலங்களிலும் மக்கள் கொண்டாடுகிறார்கள். இதனை ஆஷாட குப்த நவராத்திரி என்றும் வடமாநிலங்களில் குறிப்பிடுகிறார்கள். உலகத்தை காக்கும் அன்னையான பராசக்தியை போற்றும் விதமாக இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். வட மாநிலங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரியை சாகம்பரி நவராத்தி அல்லது காயத்ரி நவராத்திரி என்றும் சொல்லுவதுண்டு.

அன்னை ராஜராஜேஸ்வரியின் படைத் தளபதியாக விளங்கும் வாராஹியை ஆஷாட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வழிபடுவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் அனைத்தையும் அன்னை வேரோடு அழித்து, வாழ்க்கை முழுவதும் நமக்கு பாதுகாப்பாக இருப்பாள். அன்னையின் அருளால் வாழ்வில் அனைத்து விதமான வளங்களும் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. எதிரிகள் தொல்லை, பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீயசக்திகளின் பிடியில் இருந்து விடுபட முடியும்.

மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க அன்னை வாராஹியின் அருள் கட்டாயம் தேவை என்பதால் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும் நேரத்தில் அன்னை வாராஹி தேவியை குடும்பத்தோடு வழிபட வேண்டும். தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப் பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மகா வாராஹி அம்மன் சன்னதி உள்ளது. பிரசித்தி பெற்ற வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா நாட்களில் வராஹி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்.

முதல் நாளான இன்றைய தினம் வாராஹி அம்மனுக்கு இனிப்புகளால் அலங்காரம் செய்யப்பட்டது. 22 வது அண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு,  முதல் நாளான இன்று  வாராஹி அம்மனுக்கு  ஜாங்கிரி, மைசூர்பாகு, லட்டு சந்திரகலா. உள்ளிட்ட பல வகையான இனிப்புகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

நாளைய தினம் 6ஆம் தேதி வாராஹி அம்மனுக்கு  மஞ்சள் அலங்காரம்,  7ஆம் தேதி குங்குமம், 8ஆம் தேதி சந்தனம், 9ஆம் தேதி தேங்காய்ப்பூ, 10ஆம் தேதி மாதுளை, 11ஆம் தேதி நவதானியம், 12ஆம் தேதி வெண்ணெய், 13ஆம் தேதி கனிவகை அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.விழா நாட்களில் நாள்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு வாராஹி ஹோமும், 10 மணி  முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

பஞ்சமி தினமான 10ம் தேதி (புதன்கிழமை) காலை பஞ்சமி அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பஞ்சமி குழுவினரால் 1000 பேருக்கு மேல் சிறப்பு நைவேத்ய பிரசாதம் வழங்கப்படும்.15ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாதஸ்வரம், கரகாட்டம், ஒயலாட்டம், ஜெண்டை வாத்தியம், வாணவேடிக்கையுடன் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow