ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை சுட்டுத்தள்ளு.. பிஎஸ்பி தொண்டர்கள் கொதிப்பு.. மறியலால் பதற்றம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவரை படுகொலை செய்தவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் எனவும் சிபிஐ விசாரணை தேவை எனவும் வலியுறுத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் இன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Jul 6, 2024 - 10:26
 0
ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை சுட்டுத்தள்ளு.. பிஎஸ்பி தொண்டர்கள் கொதிப்பு.. மறியலால் பதற்றம்
armstrong murder

சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார். தற்போது அயனாவரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேணுகோபால்சாமி தெருவில் உள்ள அவரது பழைய வீட்டை இடித்து கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. அதனை தினமும் பார்வையிடும் ஆம்ஸ்ட்ராங் வழக்கம் போல கட்டுமான பணி நடைப்பெறும் இடத்தின் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். 

இதனை தடுக்க வந்த ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் வீரமணி மற்றும் பாலாஜி ஆகியோருக்கும் முதுகு, காது மற்றும் காலின் வெட்டு விழுந்துள்ளது. 
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆர்ம்ஸ்ராங்கை வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொன்ற சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர். 

ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்ற பிறகு மர்மகும்பல் பைக்குகளில் வேகமாக செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் அவர்களை தேடிவந்தனர்.  தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணையை தொடங்கிய நிலையில்,ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துள்ளதாக 8 பேர் நேற்று சென்னை அண்ணாநகர் போலீசில் சரணடைந்துள்ளனர். இதையடுத்து சென்னை அண்ணாநகர் போலீசார் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் பொன்னை பாலு (வயது 39), மணிவண்ணன் (25), திருவேங்கடம் (33), திருமலை (45),அருள் (33), ராமு (38), சந்தோஷ், செல்வராஜ் (48) என்பது தெரியவந்தது. இதில் பொன்னை பாலு என்பவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியாவார். இவர் தலைமையில் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்துள்ளது.

இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது ரவுடி ஆற்காடு சுரேஷ் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆற்காடு சுரேஷ் தரப்பு நம்புகிறது. இதனால் ஆம்ஸ்ட்ராங்கை பழிவாங்க அவர்கள் திட்டமிட்டனர்.இந்நிலையில் தான் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தலைமையிலான கும்பல் திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொன்றோம் என்று அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 8 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்த் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு உடற்கூராய்வு நடைபெற்று வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையான குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்றவர்களை சுட்டுத்தள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிபிஐ விசாரணை கோரியும் சாலை மறியலில் வலியுறுத்தினர். 

திடீர் சாலை மறியல் காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆம்ஸ்ட்ராங்கின் உடற்கூறாய்வு முடிந்தபின் அவரது உடல் பெரம்பூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும், மேலும் அங்கு நினைவிடமாக மாற்றுவதற்காக சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறப்பட இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow