BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. அதிகாரிகளுக்கு உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Jul 6, 2024 - 15:42
Jul 6, 2024 - 18:37
 0
BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. அதிகாரிகளுக்கு உத்தரவு!
CM Stalin Condoles Of BSP Armstrong Death

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடற்கூராய்வு வீடியோவாக ரெக்கார்ட் செய்யப்படவுள்ளது. இதனிடையே இச்சம்பவத்தில் 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை, ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மாட்டோம் என அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால் பெரம்பூர், ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

இன்னொரு பக்கம் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் மெத்தனபோக்கு தான் இப்படியான அரசியல் கொலைகளுக்கு காரணம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். படுகொலை செய்யப்பட்டவருக்கு இரங்கல் தெரிவிப்பதை விட்டுவிட்டு, சட்ட ஒழுங்கை சரி செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே இந்த நிலையென்றால், சாதாரண மக்களை பற்றி இந்த அரசுக்கு அக்கறை உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்துக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைதானவர்களிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழியாக நடைபெற்றது தெரியவந்துள்ளது. அதாவது ஆற்காடு சுரேஷ் கொலை சம்பவத்திற்கு பழிவாங்கும் படலமாக, ஸ்கெட்ச் போட்டு ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக சுரேஷின் தம்பி புன்னை பாலா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகில் வைத்து ஆற்காடு சுரேஷ் படுகாலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உதவியாலேயே ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. 

ஆனால் அந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் நீடித்து வந்துள்ளது. இந்த நிலையில் தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு நாள் வருவதற்குள், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க தான் ஆம்ஸ்ட்ராங் வெட்டி சாய்க்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow