2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு.. கண் கொத்தி பாம்பாக இருங்க.. அண்ணாமலை வார்னிங்

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஆழமாக உழைக்க வேண்டிய தேவை உள்ளது. பாஜகவில் ஏராளமானோர் இணையத் தொடங்கி உள்ளனர் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக மக்களின் குரலாக, சாமானிய மக்களின் குரலாக பாஜக நிற்க வேண்டும். இளைஞர்கள் என்னை சுற்றி வருவதோ, அலுவலகத்தை சுற்றி வருவதால் எந்த பலனும் இல்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Jul 6, 2024 - 15:56
 0
2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு.. கண் கொத்தி பாம்பாக இருங்க.. அண்ணாமலை வார்னிங்
Annamalai bjp meeting

சட்டசபை தேர்தலுக்கு தயாராகி விட்டது தமிழக பாஜக. அதற்கு முன்னோட்டமாக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தின் அனைத்து இடங்களிலும்கூட, ஒரு சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது போல, திமுகவின் அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகம் இதுபோல் வன்முறை இணைந்த மாநிலமாக இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை. கடந்த மூன்றாண்டுகளாக திமுக அரசின் பிடியிலே இப்படி நடந்துகொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

பாஜகவினரிடம் சிந்தாந்தம், நேர்மை உள்ளது. தனிமனித துதிபாடல்கள் கிடையாது. பாஜகவிற்கு உத்வேகம்தான் தேவை கடந்த ஒரு மாத காலத்தில் பணியாற்றியது போல அடுத்த 2 வருடங்கள் பாஜகவினர் பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியை பாஜக அமைக்கும்
திமுக ஆட்சியமைத்த பின்னர் அனைத்திலும் தமிழ்நாடு கீழே சென்றுள்ளது. அன்னிய முதலீட்டில் தமிழ்நாடு 5 ஆவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு முடித்து 8 லட்சம் பேர் வெளியே வருகிண்றனர். அவர்களில் 8ல்  ஒரு பங்கினர் மட்டும்தான் அரசு கல்லூரிகளுக்கு செல்கின்றனர். 
குரூப் 4 தேர்வு 21 லட்சம் பேர் எழுதி உள்ளனர். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. திமுக ஆட்சியமைத்த பின்னர் 31 லட்சம் வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக கூறி உள்ளனர். 5,400 டாஸ்மாக் கடைகளில் 45 ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை விட அரசு நூலகம், அரசு மருத்துவமனைகள் குறைவாக உள்ளது. இதனால்தான் புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டிய கடமை உள்ளது. தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே 10 லட்சம் கோடி வேலை வாய்ப்பு பெற்ற மாநிலமாக மாறும்.

இந்தியாவிலேயே மோசமான ஆட்சியை திமுகதான் நடத்துகிறது. மக்களவைத் தேர்தலில் நமக்கு வாக்களித்த மக்களுக்காக சட்டசபை வாரியாக பாஜக நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத்த உள்ளது. வாக்கு கிடைக்காத இடத்தில் கடுமையாக உழைப்போம் என்று கூறி கூட்டம் நடத்த வேண்டும். பாஜகவினர் ஒரு சட்டசபை தொகுதிக்கு 100 தெருமுனை பிரச்சார கூட்டங்களை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. 25 ஆயிரம் இடங்களில் தமிழக பாஜகவினர் நிற்க வேண்டும். கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு, நீட் ஏன் தேவை உள்ளிட்டவற்றை பாஜகவினர் பேச வேண்டும். அதற்கேற்றவாறு 7 ஆயிரம் பூத்களில் பாஜக முதலிடம் வந்துள்ளது. அவர்களையும் கௌரவிக்க வேண்டும். இரண்டாவது, மூன்றாவது  இடங்கள் வந்துள்ள பூத்களின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். தனிப்பட்ட ரீதியாக கவனம் செலுத்த வேண்டும். பூத்வாரியாக நாம் கவனம் செலுத்த வேண்டும். 

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஆழமாக உழைக்க வேண்டிய தேவை உள்ளது. பாஜகவில் ஏராளமானோர் இணையத் தொடங்கி உள்ளனர். 
தமிழக மக்களின் குரலாக, சாமானிய மக்களின் குரலாக பாஜக நிற்க வேண்டும். இளைஞர்கள் என்னை சுற்றி வருவதாலோ, அலுவலகத்தை சுற்றி வருவதால் எந்த பலனும் இல்லை. இளைஞர்கள் தங்கள் முன்னாள் உள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் தட்டிப்பறிக்க வேண்டும்.

புதிதாக அரசியலுக்கு வருபவர்கள்  பசியாக இருக்கிறார்கள். கூட்டணி மாறுவதற்கும் தயாராக உள்ளனர். கண்முன்னே வெற்றியை பறித்து சென்றுவிடுவார்கள்.
மாநில பொறுப்பு உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் நிர்வாகிகள் கட்சிப் பணிகளை செய்ய வேண்டும். 11 மாவட்ட தலைவர்கள் சொந்த பூத்களில் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள 55 தலைவர்கள் சொந்த பூத்களில் வெற்றி பெறவில்லை. பாஜகவினர் தங்களை சுயபரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

மொத்தம் உள்ள மாநில நிர்வாகிகளில் 14% மாநில நிர்வாகிகள் தான் சொந்த பூத்களில் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ளா 86% மாநில நிர்வாகிகள் சொந்த பூத்களில் வெற்றி பெறவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow