எங்கும் எதற்கும் அட்ஜஸ்ட்மெண்ட்.. நடிகைகள் படும் பாடு.. மலையாள சினிமா உலகை தோலுரித்த ஹேமா கமிசன்

மலையாள சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள், பிரச்னைகள் குறித்து ஹேமா ஆணையம் அறிக்கையில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

Aug 20, 2024 - 10:14
 0
எங்கும் எதற்கும் அட்ஜஸ்ட்மெண்ட்.. நடிகைகள் படும் பாடு.. மலையாள சினிமா உலகை தோலுரித்த ஹேமா கமிசன்
hema committee report reveals sexual exploitation in malayalam film

மலையாள சினிமா உலகத்தில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தோலுரித்து காட்டியிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. காஸ்டிங் கவுச் முதல் பாலியல் சுரண்டல், பாகுபாடு என்று மோசமான சூழல்  நிலவுவதாகவும் அட்ஜஸ்ட்மெண்ட், காம்ப்ரமைஸ் இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மலையாள ஊடகங்களில் பரபரப்பை பற்ற வைத்துள்ள ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.

மலையாள நடிகைகள் படும் பாடு:

கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள திரை உலகத்திற்கு மோசமான ஆண்டாக அமைந்தது என்றே கூற வேண்டும். தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் சில ரவுடிகளால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சக மலையாள நடிகர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். மலையாள திரை உலகை மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை பற்ற வைத்தது. 

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக இதுபோல பல மோசமான சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் ரிப்போர்ட்டின் ஒரு பகுதி இப்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 235 பக்கங்கள் கொண்ட இந்த ரிப்போர்ட்டில் பல அதிர வைக்கும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

ஹேமா கமிசன் ரிப்போர்ட்:

மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சூட்டிங் செல்லும் இடங்களில் நடிகர்கள் ஹோட்டல் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது உட்பட பல மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. இவ்வளவு மோசமான நிலைமை இருந்தும் இது குறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாகவும், சமூகத்தின் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகவும் பாலியல் சுரண்டலில் ஈடுபவர்களுக்கு எதிராக பலரும் புகாரளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

கிரிமினல்களுடன் தொடர்பு:

கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்வு காண அதிகாரமிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த குழு உருவாக்கப்பட்டால் சினிமாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த ரிப்போர்ட்டை ஹேமா கமிஷன் சமர்ப்பித்துப் பல மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும், இதில் பல முக்கிய நடிகர்கள் குறித்த தகவல்கள் இருப்பதால் இதை வெளியிடாமல் கேரள அரசாங்கம் அதை நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்பட்டது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹேமா கமிஷனில் கூறப்பட்டுள்ள விபரங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 

கழிப்பறை வசதியில்லை:

மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் என்பது வழங்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை. சூட்டிங்கின் போது பெண்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகிறார்களாம். தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும். கழிப்பறையே இல்லாத நிலையில் எங்கு போவது என்பதால் இப்படி தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுகிறார்களாம். அதிலும் குறிப்பாக வெளியூர் படப்பிடிப்புகளின் போது தண்ணீரே குடிக்காமல் இருந்து விடுகிறார்களாம். படப்பிடிப்பின்  போது தண்ணீரே குடிக்காதது ஒரு பழக்கமாகவே மலையாள சினிமாவில் உள்ளது. 

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் ஒரு கட்டத்தில் அதை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்களாம். அப்போது எங்காவது மறைவான இடத்தில் போய் கழிக்கும் போது சிறுநீர் தொற்றுகளுக்குள்ளாவார்களாம்.மாதவிடாய் நேரங்களில் பாத்ரூமை பயன்படுத்த முடியாதது பெரும் கஷ்டமாக இருக்குமாம். அது போல் நாப்கினை மாற்றவும் பழைய நாப்கினை டிஸ்போஸ் செய்யவும் இடம் இல்லாமல் தவிப்பார்களாம். 

நோய் தொற்றுக்கு ஆளாகும் நடிகைகள்:

மிக தொலைவில் உள்ள இடங்களுக்கு சென்றால் உடை மாற்றுவதற்கு கூட தனியறை இருக்காதாம். இதனால் ஏதாவது புதர்களில் மறைந்து ஒரு துணியை திரை போல் போட்டுதான் உடை மாற்றுவார்களாம். அந்த திரையை நடிகைகளின் அசிஸ்டென்ட்டுகளோ பெண் தொழில்நுட்ப கலைஞர்களோ பிடித்துக் கொள்வார்களாம். ஒரு முறை ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. அதற்கு கழிப்பறைக்குச் செல்ல 10 நிமிடங்கள் ஆகும் என்பதால் அந்த கலைஞரை டாய்லெட்டுக்கு கூட அனுப்பாமல் தயாரிப்பு நிறுவனம் கொடூரம் செய்தது. இதனால் பல பெண் கலைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. 

கொடூர முகங்கள்:

ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் கேரவனில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் அனுமதிக்குமாம். மற்ற கலைஞர்கள் அதை பயன்படுத்த அனுமதி கிடையாதாம். இந்த பாகுபாடுகள் நடிகைகளுக்கு மட்டுமில்லை, சிகை அலங்கார கலைஞர்கள், திரைக்கு பின்னால் பணியாற்றும் பெண்கள், உதவியாளர்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் ஆகியோருக்கும்தான் என ஹேமா ஆணைய அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா உலகின்  ஜிகினாத்தனங்களை தோலுரித்துள்ளது ஹேமா கமிஷன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow