மதுரை மீனாட்சி கோவிலில் நமீதாவுக்கு நடந்தது என்ன?.. அறநிலையத்துறை அதிகாரி விளக்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடிகை நமீதா இந்துவா எனக்கேட்டு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

Aug 27, 2024 - 15:55
 0
மதுரை மீனாட்சி கோவிலில் நமீதாவுக்கு நடந்தது என்ன?.. அறநிலையத்துறை அதிகாரி விளக்கம்
actress namitha swamy dharsan at meenakshi mman temple says hrce report

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்துவா எனக்கேட்டு அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டதாக நடிகை நமிதா நேற்று சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் செல்லத்துரை மற்றும் கோவில் இணை ஆணையர் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் நடந்த சம்பவம் குறித்த விவரங்களை கேட்டு விசாரணை நடத்தினார்.மேலும் இதுதொடர்பான அறிக்கையை  அறநிலையத்துறை ஆணையர், அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், ஆகஸ்ட் 26ம் தேதி திருக்கோயிலின் உள்துறை கண்காணிப்பாளராக பணியிலிருந்த வெண்மணி அவர்களிடம் காலை சுமார் 7.00 மணியளவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநாமம் அணிந்த ஒருவர் வந்து தான் இஸ்கான் அமைப்பிலிருந்து வருகிறேன் எனவும், நடிகை நமீதா அவர்களையும் அவர்களது கணவரையும் தரிசனத்திற்காக அழைத்து வந்துள்ளதாகவும், தங்களை முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு செல்லக்கூடிய வழியில் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டதாகவும். அந்த நேரத்தில் காலசந்தி பூஜைக்காக திரைபோடப்பட்டிருந்ததால், சிறிது நேரம் காத்திருக்குமாறு தான் கூறியதாகவும் மற்றும் நடிகை நமீதா அவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர் தானா என உடன் இருந்தவர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டதாகவும், 

ஆனால் வந்திருந்த நபர் தனக்கு இந்து சமய அறநிலையத்துறையில் அனைத்து உயர் அலுவலர்களையும் நன்கு தெரியும் என்றும், விரைவில் தங்களுக்கு மேல் இடத்திலிருந்து உத்தரவு வர வைக்கிறேன் என்றும், தாங்கள் உடனடியாக எங்களை முக்கியப் பிரமுகர்கள் செல்லக்கூடிய வழியில் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டார். 

தான் நமீதா அவர்களது கணவர் ஆகியோரிடம் ஏதும் பேசிக்கொள்ளவில்லை என்றும், மேற்படி இஸ்கான் நபரிடம் இந்த கோயிலுக்கென்று சில பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இருக்கின்றன என்ற விபரம் மட்டுமே தெரிவிக்கப்பட்டது எனவும், காலசந்தி பூஜை முடிந்து திரை நீக்கப்பட்டவுடன். திருக்கோயில் பேஷ்கார் காளிமுத்து திருக்கோயில் அர்ச்சகர்கள் மூலம் திருமதி நமீதா அவர்களை நெற்றியில் குங்குமம் இடச்சொல்லி திருமதி நமீதா, அவரது கணவர் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் அனைவரும் முக்கிய பிரமுகர்கள் செல்லக்கூடிய வழியில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், யூடியூப் செய்தியில் திருமதி நமீதா அவர்கள் தெரிவித்தது போன்று அவரது ஜாதி தொடர்பாகவோ, மதம் தொடர்பாகவோ இத்திருக்கோயில் கண்காணிப்பாளரால் நேரடியாக திருமதி நமீதா அவர்களிடம் எந்த விதமான கேள்வியும் கேட்கப்படவில்லை. அவரை அழைத்து வந்த நபரிடம் அவர் இந்து மதத்தை பின்பற்றுபவரா என்பது மட்டுமே கேட்டு தெரிந்துக்கொள்ளப்பட்டது.

இத்திருக்கோயில் பழக்க வழக்கப்படி, இத்திருக்கோயிலுக்கு மாற்று மதத்தினர் தரிசனத்திற்கு வரும் பொழுது, அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரம் கொடிமரத்திற்கு அப்பால் அனுமதிக்கப்படுவதில்லை. மாற்று மதத்தினர் இரண்டாம் பிரகாரத்திற்கு அப்பால் அனுமதிக்கப்படுவதில்லை என்பது தொடர்பான அறிவிப்பு பலகைகள் இத்திருக்கோயிலில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தொடர்ந்து இத்திருக்கோயிலில் இந்த நடைமுறை உள்ளது. திருக்கோயில் காலசந்தி பூஜை முடிவுற்றப்பிறகு நமீதா, அவரது கணவர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு அதன் பின் அனுப்பி வைக்கப்பட்டனர் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow